ரஜினி அரசியலுக்கு வந்தால் தி.மு.க.வுக்கு பிரச்னையா? துரைமுருகன் கூல் பதில்

அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம் ரஜினி வருவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூலாக பதில் அளித்தார் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.

மதுரை மாவட்ட திமுக சார்பாக மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதி விலக்கு கோரி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. இதில் துரைமுருகன், தி.மு.க செய்திதொடர்பாளர் இளங்கோவன் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம். ரஜினி வருவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி குடியரசுத் தலைவர் தேர்தல் வரையிலும்தான் இருக்கும் என்று எனது அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன். அதிமுக என்பது ஒரு கம்பெனி. அதில் யார் வேண்டுமானாலும் முதல்வர் என்ற மேனேஜர் பதவிக்கு வரலாம்.

தற்போது தொண்டர்கள் மூலம் முடிந்த அளவில் தி.மு.க. மக்கள் நலப்பணி செய்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. அதைப்பற்றிப் பேசத்தான் சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சிதான் நடைபெறுகிறது. ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். பிரதமரை சந்திப்பது மக்கள் நலனுக்காக இல்லை. அவர்கள் பி.ஜே.பி.க்கு கிடைத்த அடிமைகள்" என்று கூறினார்.

தி.மு.க.வினர் குளங்களை தூர்வாருவதை அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் செய்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்துக்கே அவமானம்" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டுச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!