பிளஸ்1-க்கு பொதுத் தேர்வு, பிளஸ்2-க்கு 600 மதிப்பெண்தான்- தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு | TN School education syllabus going to be altered soon, Minister Sengottayan

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (23/05/2017)

கடைசி தொடர்பு:17:27 (23/05/2017)

பிளஸ்1-க்கு பொதுத் தேர்வு, பிளஸ்2-க்கு 600 மதிப்பெண்தான்- தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பு

செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் தமிழக அரசு, '11-ம் வகுப்பில் நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இனி 600 மார்க்குக்கு மட்டுமே தேர்வு. தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படும்' போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இத்தகவல்களைக் கூறியுள்ளார்.  

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், '11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு நேரம் மூன்றிலிருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட உள்ளது. மாலை நேரங்களில் அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும், சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் அதிக திறன் உள்ளவர்களாக மாற்றப்படுவார்கள்.

செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்கால பணிகள், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பர். 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்ட வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11ஆம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு படிப்பார்கள். தோல்வியடைந்த மாணவர்கள் அந்த ஆண்டு ஜூன் மாதமே மறுதேர்வு எழுதுவர்' என்று கூறினார்.