வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (23/05/2017)

கடைசி தொடர்பு:20:22 (23/05/2017)

'என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன் கேளுங்கள்'- ரஜினிக்கு தமிழிசை அடடே அட்வைஸ்

தமிழிசை சௌந்தரராஜன்

‘நான் அரசியல் கட்சித் தலைவராக இருந்து பெற்ற அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன். ரஜினிகாந்த்தால் தனியாகச் செயல்பட இயலாது’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பா.ஜ.க.வின் மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் அப்படியொரு முடிவை எடுக்கும்பட்சத்தில் நாங்கள் அவரை வரவேற்போம். அவர் பா.ஜ.க.வுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நடிகர் ரஜினிக்காந்த் தனிக்கட்சி தொடங்கினால் அவரால் செயல்பட முடியாது. நான் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து பெற்ற அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன். அவரால் தனியாகச் செயல்பட இயலாது.

யாருமே நேரடியாக போர்க்களத்துக்குச் சென்று வெற்றிகளைக் குவிக்க முடியாது. அதற்குப் பயிற்சி தேவை. ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளித்த பின்னரே போரில் வெற்றி பெற முடியும். அதனால் நேரடியாக அரசியல் களத்துக்குச் செல்வது ரஜினிகாந்த்துக்கு நல்லது அல்ல. அவர் பா.ஜ.க.வுக்கு வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அரசியல் கட்சியினர் ஆதரிக்கவில்லை. அவரை தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று நல்லகண்ணு, திருமாவளவன், திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின் எனப் பலரும் வற்புறுத்துகிறார்கள். அவர் பா.ஜ.க.வுக்கு வந்துவிடுவாரோ என்கிற அச்சம் ஏன் ஏற்படுகிறது. எதற்காக அவர்கள் இந்த அளவுக்கு பயப்படவேண்டும். ரஜினிகாந்த் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். 

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் சரியில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தனது கடமையை உணர்ந்து சரியாகச் செயல்படவில்லை. அ.தி.மு.க ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்த ஆட்சியாக உள்ளது. பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஆட்களை நியமித்ததில்கூட ஊழல் நடந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலுமே அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. அதனால் மக்கள் இந்த ஊழல் ஆட்சியை விரைவில் புறக்கணிப்பார்கள். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள்மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாள்வது கண்டிக்கத்தக்கது. காவல்துறை மூலமாக பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பாக தமிழகத்துக்கு நிறைய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவற்றை இந்த அரசு முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது. அதனால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி, செலவழிக்கப்படாமலே மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இதனை மறைத்துவிட்டு மத்திய அரசுமீது தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது” என்றார்.