வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (23/05/2017)

கடைசி தொடர்பு:18:39 (23/05/2017)

ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு! கதறும் 30 மீனவக் குடும்பங்கள்..!

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 30 மீனவக் குடும்பங்கள் கடந்த ஏழுமாத காலமாக வீட்டுக்குத் திரும்ப முடியாமல் கதறிக் கொண்டிருக்கும் அவலம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு கிராம நிர்வாகி எல்லப்பன், முன்னாள் நிர்வாகி சத்திரத்தான். கிராமத்தில் நடைபெற்று வரும் அரசு திட்ட கட்டுமானங்களில் உப்பு மணலை பயன்படுத்தியதை தட்டிக்கேட்ட விவகாரத்தில் சத்திரத்தான்  ஆதரவாளர்களும்  எல்லப்பன் ஆதரவாளர்களும் 2016, நவம்பர் 20-ம் தேதி மோதிக் கொண்டனர்.

இதில் சிவசங்கர், சந்தோஷ், மூர்த்தி, அண்ணாதுரை, குணசேகரன், தேசப்பன், குமார் உள்பட பத்து பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அனைவரும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட, படுகாயமடைந்த அண்ணாதுரையும், குணசேகரனும்  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி அண்ணாதுரையும், குணசேகரனும் இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரைக் கைது செய்தனர்.  இந்நிலையில்தான் எல்லப்பன் தரப்பு, நடந்து முடிந்த இரட்டைக் கொலைக்கு காரணம் இந்த 30 குடும்பங்கள்தான் என்று கருதி ஊருக்குள் அனுமதிக்க மறுத்து, அவர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருக்கிறது. படகுகளை சேதப்படுத்துதல், மீன்பிடி வலைகளை அறுத்தல் என்று இன்னமும் இந்தப் பிரச்னை முற்றுப்பெறவில்லை.

இந்நிலையில், ஊரைவிட்டு ஒதுக்கி  வைக்கப்பட்ட  மீனவக் குடும்பங்கள், மீண்டும் தங்களை ஊருக்குள் அனுமதிக்கக் கோரியும், இதனால் தங்களின் பிள்ளைகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் மனு கொடுத்துள்ளனர்.