வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (23/05/2017)

கடைசி தொடர்பு:09:58 (24/05/2017)

வேந்தர் மூவிஸ் மதன் மீண்டும் கைது!

வேந்தர் மூவிஸ் மதன்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னர், பண மோசடி வழக்கில் மதனுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாயை மதன் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் மதனை காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த மதனை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் புழல் சிறையில் கைதிகளிடம் பணம் அதிகளவு புழங்குவதாகச் சிறையின் விஜிலென்ஸ் பிரிவினருக்குக் கடந்த மார்ச் மாதம் தகவல் வந்தது. இதையடுத்து, ஒவ்வொர் அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதன் அறையில் சோதனை நடத்தியபோது, 15 ஆயிரம் ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

பண மோசடி புகாரில் ஜாமீன் கிடைத்து வெளியிலிருக்கும் மதன் மீது தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.