வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (24/05/2017)

கடைசி தொடர்பு:14:00 (24/05/2017)

புகைப்படக் கண்காட்சி... பிரமாண்ட மேடை.. களை கட்டும் கருணாநிதி வைர விழா!

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைர விழா மற்றும் 94-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை ஒரு சாதனையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் தி.மு.க-வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி, 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். அறுபது ஆண்டுகள் தொடர்ந்து  சட்டமன்ற உறுப்பினர் என்ற சாதனைச் சரித்திரம் கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. ஏற்கெனவே, சட்டபேரவையில் பொன்விழா கொண்டாடியவர் கருணாநிதி. அப்போது, தி.மு.க ஆட்சியில் இருந்ததால், பொன்விழா நிகழ்ச்சிகள் களைகட்டின. சட்டமன்றத்திலே கருணாநிதியின் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இப்போது, தி.மு.க ஆட்சியில் இல்லை. கருணாநிதியும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியின் வைர விழா நிகழ்வுகள் நடைபெறவிருப்பது தி.மு.கவினருக்கு வருத்தம்தான். 

கருணாநிதிக்கு என்று ஒரு விழாவை தி.மு.க கொண்டாடும் நேரத்தில், அவரால் அந்த விழா நிகழ்வில் உரையாற்ற முடியாத நிலை இருப்பதாக தி.மு.க-வினர் வருத்தத்துடன் சொல்கிறார்கள். கருணாநிதி, மேடையில் பேசாவிட்டாலும் பரவாயில்லை, அவரை மேடையில் கொஞ்சம் நேரமாவது அமரச் செய்யுங்கள் என்று ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால், கருணாநிதிக்குத் தொண்டையில் துளைபோட்டுள்ளதால், அவரை வெளியே கூட்டிச் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதனால், கருணாநிதி இல்லாத மேடையாகத்தான் அந்த வைரவிழா மேடை இருக்கப் போகிறது என்கிறது தி.மு.க வட்டாரம். 

கருணாநிதி

கருணாநிதி, நிகழ்ச்சிக்கு வராவிட்டாலும் அவரது வைரவிழா நிகழ்ச்சி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். வைர விழா நடைபெறவுள்ள சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட தலைவர் என்பதை நினைவுகூறும் வகையில், சட்டப்பேரவை வடிவிலேயே பிரமாண்ட மேடை அமைக்கப்படவுள்ளது. அதே போல, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் ஆரம்பக்காலம் முதல், இப்போது வரையுள்ள அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. முரசொலி அலுவலகத்திலிருந்த ஒரு கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரமாண்டமான புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் அரிய புகைப்படங்களை இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, நிதிஷ்குமார் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழா நடைபெறும் அன்று காலையில், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை அகில இந்திய தலைவர்கள் சந்திக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கருணாநிதி வீட்டுக்கு ராகுல் காந்தி முதல்முறையாக செல்லவுள்ளார். தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகளும் கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புவதால், அவர்களுக்கும் அனுமதி அளித்துள்ளார் ஸ்டாலின். 
கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்காக நடத்தபடும் வைரவிழாவில் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என முழுமூச்சாக இறங்கியுள்ளார் ஸ்டாலின். 

 


டிரெண்டிங் @ விகடன்