வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (24/05/2017)

கடைசி தொடர்பு:13:19 (24/05/2017)

அய்யாக்கண்ணு வழியில் ஜந்தர்மந்தரில் மற்றொரு போராட்டம்!

இளைஞர் டேவிட் ராஜுடன் மற்றவர்கள்

ன்றைய தேதியில் தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது மதுக்கடைகள்தான். மக்களை காவுவாங்கும் மதுக்கடைகளை மூட தமிழக மக்கள் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதில் இன்றுவரை எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. அவ்வளவு ஏன்? தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நெடுஞ்சாலையையொட்டியுள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவாக, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட, உள்ளாட்சி மன்ற சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், கிராமப்புறங்களில் புதிதாக பல மதுக்கடைகளைத் திறக்கும் சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதுபோன்று, புதிதாக மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், எதிர்ப்பை மீறி திறக்கப்படும் மதுக்கடைகளை அடித்து, உடைத்து சூறையாடியும் வருகின்றனர். மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்தால், அரசுக்கு வருமானம் பெருமளவு குறையும் எனக் கருதும் அரசு, மூடப்படும் கடைகளுக்கு மிச்சமாக புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்து, பல குடும்பங்களைக் கண்ணீரில் ஆழ்த்தி வருகிறது. தற்போது, மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், இந்தப் போராட்டத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதுவால் எவ்வளவு பிரச்னை ஏற்படுகிறது? அதனால் எவ்வளவு குடும்பங்கள் அழிந்து வருகின்றன என்று மத்திய அரசுக்குத் தெரிவிப்பதுடன், மதுவுக்கு மொத்தமாக முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 24 நாள்களாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் போராடி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ்.

டேவிட் ராஜ் மதுவுக்கு எதிரான டேவிட் ராஜின் போராட்டம் இந்த 24 நாள்கள் மட்டுமல்ல. ஏற்கெனவே கடந்த ஐந்து வருடங்களாகப் போராடி வருகிறார் அவர். மதுவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிய பின், தான் படைத்த சாதனைகள், செய்து கொண்டிருந்த வேலை அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூர்தான் டேவிட் ராஜின் சொந்த ஊர். வாள் சண்டை போட்டியில் பத்து முறை தேசிய விருதுகளை வென்று குவித்தவர். கைப்பந்து போட்டியில் மாநில அளவில் விருதுகளை வென்றவர். இதனால் இவருக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ராணுவத்தில் வேலைகிடைத்தது. ஆனால், நாட்டுக்கு நல்லது செய்வதற்கு பதவி தேவையில்லை; நல்ல எண்ணம் இருந்தாலே போதுமானது என்று கருதி, அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு கடந்த ஐந்து வருடமாக மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், நமது அரசாங்கம் இவருக்குக் கொடுத்திருக்கும் பரிசு என்ன தெரியுமா? 'தேசவிரோதி' என்ற பட்டம்தான். போலீஸார் இவரைக் கைது செய்து இடுப்பெலும்பை உடைத்துள்ளனர். பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த டேவிட் ராஜ், மீண்டும் வந்து மதுவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்கிறார். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 24 நாள்களாக போராடி வரும் இவர் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; மீடியாக்களின் பார்வையிலும் படவில்லை. 'எப்படியாவது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று போராடிவரும் டேவிட் ராஜூடன் பேசினோம். 

"வாள் சண்டையில் தேசிய அளவில் பத்துமுறை விருது பெற்றிருக்கிறேன். கைப்பந்து போட்டியில் மாநில அளவில் விருது வாங்கியிருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு புனேவில் உள்ள ராணுவப் பயிற்சி அகாடமியில் பணியில் சேர்ந்தபோது, என் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. என் அப்பா மது அருந்திவிட்டு வீட்டில் ஏகப்பட்ட பிரச்னை செய்திருக்கிறார். குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. மது ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சிதறடிக்கும் என்பதை அப்போதுதான் உணர்வுபூர்வமாக தெரிந்து கொண்டேன். சரி வீட்டுக்குச் சென்று வரலாம் என்று முடிவெடுத்து வீட்டுக்கு வந்தேன். அப்பாவை எப்படியாவது மதுவிலிருந்து விடுபட வைக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தேன். அப்போதுதான் மதுவால் என் வீட்டில் மட்டும் பிரச்னை இல்லை; மாநிலம் முழுவதும் பிரச்னை இருப்பதை முழுமையாக உணர்ந்தேன். மதுக்கடைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினேன். அதனால், என் வேலையை விட நேரிட்டது. அதன்பிறகு, மதுவுக்கு எதிராக முழுநேரமும் போராடி வருகிறேன். சசிபெருமாள் இறப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய என்னைக் காவல்துறை கைது செய்தது. போலீஸார் தாக்கியதில் என் இடுப்பெலும்பு உடைத்தது. பல நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். அதன்பிறகு கொஞ்சம் உடம்பு சரியானதும், எங்கெல்லாம் மதுவுக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் செல்வேன். திருச்சியில் 'மக்கள் அதிகாரம்' சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டபோது காவல்துறையினரால் 'தேசவிரோதி' என்ற பட்டத்துடன் கைது செய்யப்பட்டேன். மதுவுக்கு எதிராக போராடுபவன் எப்படி தேசத் துரோகி ஆவான்? அதிலும் நான் விளையாட்டுத்துறையில் பல விருதுகள் வாங்கி இருக்கிறேன். ராணுவத்தில் இருந்திருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தார்கள். இதனால் அரசால் கொடுக்கப்பட்ட அத்தனை சான்றிதழ்களையும் கிழித்தெறிந்தேன்.

டாஸ்மாக்

நல்ல விளையாட்டு வீரன் எனற அடையாளம் எனக்கு வேண்டாம். மக்கள் நன்றாக இருக்க வேண்டும். எனவே மதுவுக்காக போராடினேன். அந்த ஒரு பெயர் போதும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. இப்போது தமிழகமெங்கும் மதுக்கடைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் தமிழக அரசு மக்களின் குடியைக் கெடுக்க நினைக்கிறதே தவிர, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எந்தவிதமான முயற்சியையும் எடுத்தபாடில்லை. அதனால்தான், டெல்லி சென்று போராட முடிவெடுத்தேன். மே 1-ம் தேதி ஜந்தர்மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில், நான் மட்டும் தனியாக போராடி வந்தேன். இப்போது என்னோடு சேர்ந்து ஐந்து பேர் போராடி வருகிறார்கள். இன்றோடு 24 நாள்கள் ஆகின்றன. தமிழக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு மட்டும்தான் என்னை வந்து பார்த்தார், வேறு எந்த அரசியல்வாதியும் எங்கள் குறைகளைக் கேட்க இங்கு வரவில்லை. மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக முடிவு தெரியாமல் நான் தமிழ்நாட்டுக்கு வரப்போவதில்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை நான் இங்கு போராடிக்கொண்டுதான் இருப்பேன்" என்று தீர்க்கமாகத் தெரிவித்தார்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகப் போராடி வரும் இவரை அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்க வருவார்கள்? அவர்களுக்கு இதுபோன்றவர்களைப் பார்ப்பதை விட முக்கியமான பல வேலைகள் இருக்கலாம். அந்த வேலைகளை விட்டுவிட்டு டேவிட் ராஜின் குரலுக்கு எங்கே செவிமடுக்கப் போகிறார்கள்?


டிரெண்டிங் @ விகடன்