''குரான் கூறும்படி பெண்களை யாரும் மதிப்பதில்லை!'' - கொதிக்கும் ஷெரிஃபா கானம் | "No-one respects women as per Quran' - Sharifa khanam speaks about hard-hitting truth!

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (24/05/2017)

கடைசி தொடர்பு:13:41 (24/05/2017)

''குரான் கூறும்படி பெண்களை யாரும் மதிப்பதில்லை!'' - கொதிக்கும் ஷெரிஃபா கானம்

குரான்

ஸ்லாமியர்களின் ‘முத்தலாக்’ முறையானது நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் அமராவதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘‘முஸ்லிம் சமூகத்தினர் 'முத்தலாக்' முறையை மாற்றியமைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்  சூழ்நிலை ஏற்படும். இது பெண்களின் நீதிக்கான விவகாரம். பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்றார். இந்தப் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கையா நாயுடுவின் இந்தக் கருத்து பற்றி, 'ஸ்டெப்ஸ்' அமைப்பு மூலம் முஸ்லிம் பெண்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணுரிமைப் போராளி ஷெரிஃபா கானம் அவர்களிடம் கேட்டோம்.

“முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையைப் பற்றிப் பேசுகிற வெங்கையா நாயுடுவும் சரி, அவர் சார்ந்திருக்கும் பா.ஜ.க. கட்சியும் சரி, இஸ்லாமியப் பெண்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். எங்கள் பெண்கள் தினந்தோறும் அனுபவிக்கும் இன்னல்களை அரசியலாக்கத் துடிக்கிறார்கள். அதேபோலத்தான் இஸ்லாமிய அமைப்புகளும். பெண்களுக்கான சுதந்திரத்தைக்கூட கொடுக்காமல் முடக்கிவைத்திருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் மத்தியில் புழுவாக துடித்துக்கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம் பெண்கள்.

முத்தலாக் முறையைத் தடை செய்யுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டும் வெங்கையா நாயுடு போன்றவர்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிடமே சொல்கிறார்கள். அவர்களிடம்தானே அதிகாரம் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். அதிகாரத்தை வைத்திருப்பவர்களிடமே போய் சொன்னால், எப்படித் தீர்வு கிடைக்கும்? அவர்கள் எப்படி அதிகாரத்தை விட்டுக்கொடுப்பார்கள்? பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளிடம் கேளுங்கள். எங்கள் அமைப்பில் இப்போது ஐம்பதாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். எங்களிடம் வந்து கேளுங்கள். பாதிப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் வலியும் வேதனையும். அதைவிட்டுவிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஏதோ பெண்களை மதிப்பதுபோல அவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கென்னவோ இது இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றும் வேலையாக இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. காரணம், முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்த மத்திய அரசு, ஏன் இப்போது வரை ஓர் ஆணையை கொண்டுவரவில்லை. நீங்கள் முத்தலாக் செய்தால், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று இதுவரை ஒரு சட்டத்தையும் அவர்கள் பிறப்பிக்கவில்லையே.

ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அனுபவிக்கும் வேதனைகளுக்கு யார் மருந்திடப் போகிறார்கள் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள் எங்கள் பெண்கள். தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் வீட்டிலிருந்து யாராவது போலீஸில் புகார் அளித்தால், அவர்களை ஜமாத்திலிருந்து தள்ளிவைத்துவிடுவோம் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

உண்மையைச் சொல்வதென்றால் இங்கே யாரும் குரான் சொல்வதுபோல நடக்கவில்லை. விவாகரத்து என்ற பெயரில் ஜமாத்துக்குச் சென்று பிரச்னையைச் சொல்கிறார்கள். அங்கே கணவனை மட்டும் அழைக்கிறார்கள். பெண் சார்பாக அவளுடைய அண்ணனிடமும் அப்பாவிடமும் பேசுகிறார்கள். அவர்களோ பெண்ணின் உணர்வுகளைப் பற்றி சிந்திக்காமல், அவளுக்குத் தேவையான உடையும் உணவும் கிடைத்தாலே போதும். நம் பெண் உயிரோடாவது இருக்கும் என்று நினைக்கிறார்கள். இப்படி வெளியே சொல்ல முடியாமல் எத்தனையோ வலிகள் இஸ்லாமிய பெண்களுக்கு இருக்கின்றன. நாம் எதற்காகச் சாகிறோம் என்றுகூட தெரியாமல் பல பெண்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு முத்தலாக் முறையை ஒழிப்பதுதான். இதைப் பற்றி பேசவும் தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் முன்வருவதில்லை. பேசினால் அவர்களுக்கு ஆண்களின் ஓட்டு போய்விடும் என்று பயப்படுகிறார்கள்” என்றார் கொதிப்புடன்.

இதுகுறித்து, இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர்.கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, ''பெண்கள் விவகாரங்களில் பெண்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால், இந்த விஷயத்தில் முஸ்லிம் ஜமாத்துகள் இனியாவது பெண்களும் கலந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வரவேண்டும். பெண்கள் விஷயங்களில் அவர்களால்தான் சரியான முடிவை எடுக்க முடியும். அரசே எல்லோரிடமும் போய் பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பிடம் மட்டுமே பேச முடியும். அகில இந்திய முஸ்லிம் தனியார் வாரியம் என்பது அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பில் பெண் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். முன்பிருந்ததைவிட இப்போது முத்தலாக் விஷயத்தில் இந்த வாரியம் மூன்று புதிய விதிகளை செய்ய இருக்கிறது.

முதலாவதாக, முத்தலாக் கோரி வருபவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம் வழக்குகளையும் விசாரிக்கும் ஷரியத் தீர்ப்பாயங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்ப இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, திருமணம் புரியும்போது ஆண்களும் பெண்களும் தங்கள் தரப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான விதிகளை போடலாம். அப்படித் திருமணம் செய்யும்போதே வருங்காலத்தில் ஆண், முத்தலாக் செய்தால் நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று அந்தப் பெண் நிபந்தனை (நிக்காஹ் நாமா) போட உரிமை வழங்கப்படுகிறது.

மூன்றாவதாக, முத்தலாக் செய்யும் குடும்பங்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்வது உள்ளிட்ட விதிகளை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவுசெய்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்னையில் முன்பு முடியாது என்று சொல்லிய நிலை இப்போது மாறியிருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறியே. இதுபோன்ற சமூகச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சீர்திருத்தம் செய்தால்தான் சரியாக இருக்கும். இன்னொரு சமுதாயத்தின் தலையீடோ அல்லது அரசின் தலையீடோ அல்லது இஸ்லாத்தை வெறுக்கும் ஒரு வகுப்புவாத கட்சியின் தலையீடோ உள்ளே நுழைந்தால், பாதகமான விளைவுகளே ஏற்படும். அது பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதில், விபரீதமான சூழலை ஏற்படுத்திவிடும். எனவே, இந்த விஷயத்தில் உள்ளிருந்துதான் முடிவு வர வேண்டும். அரசு பரிந்துரையோ, வேண்டுகோளோ விடுக்கலாம். நாங்களே சட்டத்தைக் கொண்டுவந்துவிடுவோம் என்று சொல்வதெல்லாம் தீர்வாகிவிடாது. ஷா பானு (ஜீவனாம்ச வழக்கு) வழக்கு வந்தபோது ராஜீவ் காந்தி முஸ்லிம் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசித்து முடிவெடுத்ததால்தான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. அதுபோல இந்தப் பிரச்னையையும் கையாள வேண்டும். அப்படியில்லாமல் அரசு தானாகவே சட்டத்தைக் கொண்டுவந்தால் அதை முஸ்லிம் சமுதாயம் அங்கீகரிக்குமா... அதன்படி நடக்குமா என்பது கேள்விக்குறிதான்” என்கிறார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இதுகுறித்து கருத்துகள் கூறிவருகின்றனர். எதுவாக இருந்தாலும், இந்த விஷயத்தில் நாட்டின் நல்லிணக்கம் கெடாமல் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 


டிரெண்டிங் @ விகடன்