பசி தீர குப்பையைக் கிளறி சாப்பிட்ட யானை... கலங்கிய கிராம மக்கள்! | An emotional video of elephant searching for food in garbage

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (24/05/2017)

கடைசி தொடர்பு:16:49 (24/05/2017)

பசி தீர குப்பையைக் கிளறி சாப்பிட்ட யானை... கலங்கிய கிராம மக்கள்!

யானை

யானைகள் ஆச்சர்யமானவை. எப்போதும் நாம் அதை தலை உயர்த்திதான் பார்த்திருப்போம். அதற்கு அதன் உருவம் ஒரு காரணம் என்றாலும், நம் மனதில் அவற்றின் மீதிருக்கும் ஆச்சர்யமும் முக்கிய காரணம். அந்த யானைகளை தெருக்களுக்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்தான் மனிதன் என்ற குற்றச்சாட்டே நம்மை நெருடும். இப்போது, அதனினும் மோசமான ஒரு நிலைக்கு அந்த விலங்கை நாம் தள்ளியிருக்கிறோம். சென்ற வாரம் நீலகிரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

நீலகிரி பகுதியில் யானைகள் அதிகம். அதில் ஒரு யானை, உணவு கிடைக்காமல் அலைந்திருக்கிறது. வேறு எங்கும் உணவு கிடைக்காமல், சாலைக்கு நடுவே ஓடியிருக்கிறது. அங்கே குப்பைகள் கொட்டப்பட்ட ஓர் இடத்தை நோக்கி  வந்திருக்கிறது. குப்பைகளை கிளறி, அதில் தனக்கு எதாவது சாப்பிட கிடைக்காதா என அந்த பசியால் வாடிய விலங்கு தேடியிருக்கிறது. அதில் இருந்த சில கழிவுகளை வேறு வழியின்றி அந்த யானை சாப்பிடிருக்கிறது. வேறு வழியில்லை. உயிர் வாழ வேண்டும் என்பதுதானே அத்தனை உயிர்களின் நோக்கமும்?

இதை அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. “யானைப் பசிக்கு சோளபொரி” என்பார்கள். அந்த மாதிரிதான் ஆகியிருக்கிறது. இத்தனைக்கும், சம்பவம், நடந்த இடம் காட்டுக்கு மிக அருகில் இருக்கும் இடம். காட்டுக்குள்ளே யானைக்கு உணவு கிடைக்காத அளவுக்கு அதை நாம் சீரழித்திருக்கிறோம். வறட்சியால் தண்ணீரும் கிடைப்பதில்லை. அதனால், விலங்குகள் விரைவில் சோர்வடைகின்றன. 

ஒரு யானைக்கு தினமும் 250 கிலோ வரை உணவு வேண்டும். அவை செரிக்கத் தண்ணீரும் வேண்டும். யானையின் உணவில் 60% புற்கள்தான். ஆனால், வறட்சியால் காடுகளில் எங்கேயும் புற்கள் இல்லை. தண்ணீரும் இல்லை. யானைகள் என்ன செய்யும்? இது போன்ற குப்பைகளைக் கூட தேடித்தான் பார்க்கும். அதுவும் போதாமல் மடிந்துதான் போகும்.

கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக - கேரள எல்லைக் காடுகளில் 50 யானைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வனவிலங்குகள் செத்து மடிந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் முதுமலை, சத்தியமங்கலம், கோவைக் காடுகளில் 46 யானைகள் இறந்துள்ளன. சில மாத குட்டிகளில் தொடங்கி, 30 வயதான யானைகள் வரை இறந்துப் போயுள்ளன. இந்த இறப்புகளுக்கெல்லாம் முதன்மையான காரணமாக வறட்சி இருக்கிறது. 

பசியாலும், தாகத்தாலும் வாடும் விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரத்தான் செய்யும். அதன் கோவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் இருப்பிடமான காட்டுக்குள் மனிதன் புகுந்து சர்வ நாசத்தையும் செய்கிறோம். விலங்குகள் அதை செய்தால் நம்மால் பொறுக்க முடியவில்லை. மனிதனின் எல்லை மீறலுக்குப் பேராசையே காரணம். ஆனால், விலங்குகளின் வருகைக்கு உயிர் வாழ வேண்டியதே காரணம். 

இந்தப் பூமி மனிதர்களுக்கானது மட்டுமேயில்லை. அப்படி வாழ மனிதர்களாலும் முடியாது. இனியாவது, உயிர்ச்சங்கிலியை புரிந்துகொண்டு, இயற்கையின் விதிப்படி நாம் வாழ வேண்டும். இல்லையேல், இன்று யானைகளையும், பிற விலங்குகளையும் துரத்தும் மரணம் மனிதர்களையும் துரத்தும். அப்போது நாம் ஓடி ஒளிய பூமியில் ஓர் இடம் கூட கிடைக்காது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்