வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (24/05/2017)

கடைசி தொடர்பு:15:10 (24/05/2017)

பத்து நாளில் 2.82 லட்சம் பயணிகள்! சென்னை சுரங்க மெட்ரோ ரயிலுக்கு வரவேற்பு!

சென்னை, சுரங்க வழி மெட்ரோ ரயிலுக்கு ஆரம்பத்தில் பயணிகள் வரத்து குறைந்து இருந்தது. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் சுரங்க மெட்ரோ ரயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ

சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை, ஏப்ரல் 14-ம் தேதி துவங்கியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலுமான மெட்ரோ ரயில் சேவை, ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை, பத்து நாள்களுக்கு முன்னர் துவங்கியது. சுமார் எட்டு கி.மீ தொலைவுக்கு இந்தச் சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.

முதல் இரண்டு நாள்களில், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயிலுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுத்தடுத்த நாள்களில் மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்தச் சேவையை, இந்த பத்து நாள்களில் மட்டும் 2.82 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகியுள்ளன.

சென்னை மெட்ரோ கட்டணச் சேவைகளின் அடிப்படையில், நேரு பூங்காவில் இருந்து பரங்கிமலைக்கு 45 ரூபாய், நேரு பூங்கா-விமான நிலையம் வரை 54 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நின்று டிக்கெட் பெற விரும்பாதவர்களுக்காக, ஒரு சேமிப்பு மதிப்பு அட்டை வழங்கப்படுகிறது. அதில் 50 ரூபாய் செலுத்தித் துவங்கி, 100 ரூபாய் மினிமம் பேல்ன்ஸ் வைத்துக்கொண்டு பயணம் செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் உள்ளன.