Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இன்ஸ்பெக்டர்களை மிரட்டும் போலீஸ் கான்ஸ்டபிள்கள்!’ - மூன்றாண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ‘தைரியம்’ #VikatanExclusive

போலீஸ்

தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் எஸ்பி-களின் நேரடித் தொடர்பிலிருக்கும் கான்ஸ்டபிள்கள், மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிவருகின்றனர். செல்வாக்கான கான்ஸ்டபிள்களில் சிலர், உயரதிகாரிகளான இன்ஸ்பெக்டர்களுக்கே ஆர்டர் போடுகின்றனர்.

யாரையும் சந்தேகக் கண்களோடு பார்ப்பதே போலீஸாரின் வேலை. இதனால்தான் போலீஸாரையே கண்காணிக்க நுண்ணறிவுப்பிரிவு, மாநகர, புறநகர உளவுப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. தவறு செய்யும் போலீஸாரைக் கண்காணிப்பதோடு, அன்றாட அரசியல் நிகழ்வுகள், கட்சியினரின் செயல்பாடுகள் என அரசுக்கு ஒற்றர்கள்போல தகவல்கள் சொல்வதும் இந்தப் பிரிவுகளின் முக்கிய வேலை. இந்தச் சூழ்நிலையில், உளவு பார்க்கும் போலீஸாருக்கும் லோக்கல் போலீஸாருக்கும் இடையே அடிக்கடி அக்கப்போர் நடப்பது வாடிக்கை. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள போலீஸ் எஸ்பி-யின் நேரடித் தொடர்பிலிருக்கும் போலீஸாருக்கும் லோக்கல் போலீஸாருக்கும் நடக்கும் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "மாவட்டங்களில் உள்ள எஸ்பி. அலுவலகங்களில், எஸ்பி-க்கு தகவல் சொல்வதற்காக சிலர் பணியமர்த்தப்படுவதுண்டு. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் என பணியமர்த்தப்படும் போலீஸாரில் சிலர், அந்தந்த மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் உள்ள எஸ்பி, நேரடித் தொடர்பிலிருக்கும் போலீஸார், லோக்கல் போலீஸாருக்கே ஆர்டர் போடுமளவுக்கு செல்வாக்காக இருக்கின்றனர்.

நெல்லை மாவட்டம், கேரள எல்லைப் பகுதி கட்டுப்பாட்டிலிருக்கும் இன்ஸ்பெக்டர், ஒருவர் குறித்து எஸ்பி. கான்ஸ்டபிள் கொடுத்த தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், இரண்டு மாநில எல்லையில் உள்ள தொழிலதிபர்களுடன் நட்புடன் இருந்துள்ளார். இந்தத் தகவலை எஸ்பி-யின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டருக்கும் கான்ஸ்டபிளுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு, தனிப்பட்ட பிரச்னை என்பது தெரியவந்தது. அந்த கான்ஸ்டபிள், இந்த இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல பலரை சிக்கலில் சிக்கவைத்துள்ளவர். ஆனால், அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பணியில் இருப்பதால், லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாக இருக்கிறாராம்.

தென்மாவட்டங்களில் நீண்ட காலப் பிரச்னையாக இருப்பது, சாதிரீதியான மோதல். அதன்மூலம் போலீஸாரில் சிலர் குளிர்காய்ந்துவருகின்றனர். தங்களுக்குப் பிடிக்காத இன்ஸ்பெக்டர்களைக் குறிவைத்து, எஸ்பி-யிடம் போட்டுக்கொடுக்கும் வேலையில் நடக்கிறதாம். இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் வேலைபார்க்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு, தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், சாதியின் சாயத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஒருவர் வேறு மாவட்டத்துக்கு இடமாற்றிய விவகாரமும் இருக்கிறது" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போலீஸில் இடமாறுதல் அளிக்கப்படும். ஆனால், எஸ்பி-க்கு தகவல் சொல்லும் போலீஸார் மட்டும் மாற்றப்படுவதில்லை. அவர்களை மாற்றினால், தகவல்கள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்லப்படுகிறது. இதை, சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உறுதுணையாகவே இருக்கின்றனர். இதில், முரண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர்கள் குறித்து தவறான தகவல் எஸ்.பியிடம் சொல்லப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கவைத்துவிடுகிறார்கள் எஸ்பி கான்ஸ்டபிள்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படும் இன்ஸ்பெக்டர்கள், சரியாக செயல்பட்டிருந்தால், எதையும் நேர்மையாக எதிர்கொள்ளலாம். ஆனால், இன்ஸ்பெக்டர்கள் மீதும் தவறு இருப்பதால், எஸ்பி., கான்ஸ்டபிள்கள் கோலோச்சுவதைத் தடுக்க முடியாது. லோக்கல் போலீஸ் நிலையங்களிலேயே சில எஸ்பி., கான்ஸ்டபிள்கள் வழக்கை, பஞ்சாயத்து செய்து முடித்த கதைகளும் இருக்கின்றன" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டபோது, "எங்களிடம் போலீஸ் தொடர்பான புகார்களை விசாரித்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், தனிப்பட்ட சுயலாபம் எதுவுமில்லை. தவறு செய்த போலீஸ் அதிகாரிகள், இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளைச் சொல்கின்றனர். எஸ்பி., நேரடித் தொடர்பிலிருக்கும் போலீஸார், தவறு செய்தாலும் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களைக் கட்டுப்படுத்தும் டிஐஜி மற்றும் நெல்லை போலீஸ் கமிஷனர் பதவி காலியாகவே இருக்கின்றன. அந்தப் பதவிகள் விரைவில் நிரப்பப்படும். அதன்பிறகு, முழுவீச்சில் செயல்படுவோம்" என்றார்.

எஸ்பி., கான்ஸ்டபிள்கள், சப்-இன்ஸ்பெக்டர்களின் செயல்பாடுகள்குறித்து போலீஸில் ஒரு பரபரப்பான வாட்ஸ்அப் பதிவு வைரலாகிவருகிறது. அந்தப் பதவில் பாதிக்கப்பட்ட போலீஸார், தங்களுக்கு நேர்ந்த விவரத்தைச் சொல்லி புலம்பியுள்ளனர். இந்தத் தகவல், போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனால், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement