வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (24/05/2017)

கடைசி தொடர்பு:15:52 (24/05/2017)

இந்த 10 விஷயங்களை சாத்தியப்படுத்துங்கள் செங்கோட்டையன்! - கல்வி சீர்திருத்தத்தை விவரிக்கும் கலாமின் ஆலோசகர் #VikatanExclusive

செங்கோட்டையன்

பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தியது கல்வியாளர்களிடையே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது. 'பத்தாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா?' என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர். 'கல்வித்துறையில்தான் சீர்திருத்தம் தேவைப்படுகிறதே தவிர, பொதுத்தேர்வு முறையில் அல்ல' என்கிறார் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வெ.பொன்ராஜ்.

பள்ளிக்கல்வித்துறையில் இதுவரையில் இல்லாத அளவுக்குப் புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வை அறிவித்தார். இதனால், தனியார் பள்ளிகள் பலவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. அமைச்சரின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய பொன்ராஜ், "அரசின் இந்த முடிவு என்பது மாணவர்கள் மீதான தேவையற்ற சுமையாகத்தான் பார்க்கிறேன். தற்போதுள்ள நிலையில் நமது கல்வித்திட்டத்தில் சீர்த்திருத்தமும் சிந்தனையில் மாற்றமும் தேவைப்படுகிறது. பொதுத்தேர்வு நடத்துவதால் எந்தத் தீர்வும் வந்துவிடாது. பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை வரவேற்கிறேன்.

ஆனால், 11 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வும் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பள்ளிகளில் சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டிய நிலை வருகிறது என்றால், உங்கள் கல்வி முறையும் கற்பிக்கும் முறையும் சரியில்லை என்றுதான் அர்த்தம். கல்வியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அந்த சீர்திருத்தமானது மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஆராயும் திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் திறனைப் புகுத்தி, மாணவர்களை மூன்று ஆண்டுகள் சித்ரவதை செய்வதாக இருக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடந்தால், அந்த மாணவன் எப்படித் தாங்குவான்? பொதுவாக, பொதுத்தேர்வு என்றாலே பெற்றோர்களின் இம்சையைத் தாங்க முடியாது. இதில் மூன்று ஆண்டுகள் அவனை நீங்கள் கொடுமைப்படுத்த வேண்டுமா?" என ஆதங்கப்பட்டவர், 

பொன்ராஜ்"தற்போதுள்ள சூழலில் மாணவர்களுக்குத் தேவையானது படிக்கும் திறன், கற்றல் திறன், கேட்கும் திறன், பார்க்கும் திறன், பகிரும் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவைதான். இதனை 10, 11, 12 பொதுத் தேர்வுகள் கொண்டு வருமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது. அடுத்த வருடம் பொறியியல் கல்லூரிகளுக்கும் அகில இந்திய தகுதித்தேர்வு வர இருக்கிறது. ' NEET, JEE தேர்வுக்கு இணையான தேர்வை தமிழக அரசு நடத்திக்கொள்ளும்' என்று மாநில உரிமைக்காகப் போராடி, அதை செயல்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை தமிழக அரசுக்கு உண்டு. இதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்றாலும் மாணவர்களை பலியாக்காதீர்கள். இதில், அமைச்சரின் கவனத்துக்கு சில ஆலோசனைகளையும் சொல்ல விரும்புகிறேன்" என்றவர், பத்து விஷயங்களைப் பட்டியலிட்டார்.

1. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் நான்கு வருட  முன் பட்டப்படிப்பு பாடத் திட்டத்தை (Pre Graduation Course) உருவாக்குங்கள்.

2. ஆறு மாத செமஸ்டர் சிஸ்டத்தின்படி இந்தப் படிப்பு அமைய வேண்டும். இந்த நான்கு வருடங்களுக்குள், அந்த மாணவன் எந்தப் பாடப்பிரிவில் தோல்வி அடைந்தாலும், பின்பு படித்து வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இந்த முறையில் வந்தால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயம் குறையும். பயம் இல்லாத மனமே எதையும் வெல்லும். மதிப்பெண் மட்டும் குறிக்கோள் அல்ல.

3. இதன் வழியாக கற்பித்தல், கற்கும் முறை, கேள்வி கேட்கும் முறை, வினாத்தாள் திருத்தும் முறை ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வாருங்கள். 

4. இந்தப் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். 

5. நீங்கள் விரும்பியபடி, மூன்று வருட காலத்தில் நமது பாடத்திட்ட முறையை, மத்திய பாடத்திட்டத்தைவிட (CBSE) உலகத் தரமுள்ளதாகக் கொண்டு வாருங்கள். அந்த வேலைகள் தனியாக நடக்கட்டும். 

6. தற்போதைய உடனடித் தேவை, மத்திய பாடத்திட்ட முறையை (CBSE) அடுத்த ஆண்டு தமிழில் மாற்றுங்கள். 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம் வரும் வரை இதைத் தமிழில் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள்.

உதயசந்திரன்7. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். ஆங்கிலத்தை ஆறே மாதத்தில் படிக்க வைக்க, பேச, விவாதிக்க எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அதை அறிமுகப்படுத்தி, ஆங்கிலத்தின் மீதுள்ள பயத்தைப் போக்குங்கள்.

8. விளையாட்டு, சமூக சேவை, ஒழுக்கம், யோகா, தியானம், பெற்றோர்களை மதிக்கும் பண்பு, பேச்சுத் திறன், எழுத்துத் திறன், அரசியல் அறிவு, அறிவார்ந்த விவாத திறன் போன்றவைகளுக்கும் தனித்தேர்வு முறை வைத்து அதையும் உயர்கல்வி  தகுதித் தேர்வுக்கு ஒரு மதிப்பெண்ணாக, அல்லது கிரேட் முறையில் அவனை மதிப்பிட்டு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட மனிதனாக, சமூக, பொருளாதார, அரசியல் உணர்ந்த வல்லமை மிக்க மாணாக்கர்களை உருவாக்கும் பாடதிட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்.

9. பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் விடையை புரிந்து வினாத்தாளை திருத்தும் திறனை ஏற்படுத்திக்கொடுங்கள். அதாவது ஒரே விடையை ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்க கூடாது. அப்படிப்பட்ட அடிப்படை கேள்விகள் இருக்க கூடாது. சிந்திக்கும் திறன் உள்ள கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் தயாராக வேண்டும்.

10. இந்த பாடத் திட்ட முறையை, கற்றல், கற்பிக்கும் முறையை, பயிற்றுவிக்கும் முறையை ஊக்குவிக்கும் முகமாக தரச்சான்று பெற வைத்து பள்ளிகளை தொடர்ந்து தரப்படுத்துங்கள்" என விவரித்தவர், 

"இந்த பத்து விஷயங்களையும் சரியாகச் செய்தால், உலகத்திலேயே மிகச் சிறந்த கல்வித்துறையாக தமிழக கல்வித்துறை மாறும். மாணவர்களுக்கு வகுப்பறைகளில் படிக்கும் படிப்பே போதுமானதாக இருக்கும். தனியாக சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன்பின்னர், ஆரம்பக் கல்வி, நடுநிலைக்கல்வியில் படிப்படியாக மாற்றம் கொண்டு வாருங்கள். இப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வர உங்களாலும் (அமைச்சர் செங்கோட்டையன்) முடியும். பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனாலும் முடியும். நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்" என்றார் தீர்க்கமாக.


டிரெண்டிங் @ விகடன்