“ரஜினி அரசியலுக்கு வந்தால் இவரெல்லாம் காணாமல் போய்விடுவார்!” கொதிக்கும் ரசிகர்கள்

ரஜினி

ஜினி வாய்ஸ்க்காக ஒரு கூட்டம்... அவருடைய வாய்ஸைவைத்து விளையாடுவதற்காக மற்றொரு கூட்டம்... இது, இன்று நேற்றல்ல. இருபது வருடங்களுக்கு மேலாக அவரை வைத்து அரசியல் நடத்துவதும், ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தேர்தல் நெருங்கும்போது அரசியல் கட்சிகள் அவரது ஆதரவைத் தேடுவதும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகும்போது அவர் ஏதாவது பேசுவதுமே இதுபோன்ற கூட்டத்தினருக்கு விருந்தாக இருந்துவருகிறது. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்ட வாரியாகத் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் குறித்து இருந்ததுடன், அவரும் வருங்காலத்தில் அரசியலில் குதிப்பார் என்றே தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் பேசியிருக்கும் பரபரப்பான அரசியல் செய்தியால் மேலே சொன்ன கூட்டத்தினரைத் தவிர, பத்திரிகை, இணையம், இன்னும் பிறவற்றுக்கு நல்ல விருந்து கிடைத்துள்ளது. அவரும், அவருடையச் செய்தியும்தான் தற்போது அநேக இடங்களில் அதிகமாகப் பகிரப்படுகின்றன. இப்படியானச் சூழ்நிலையில், ரஜினி அரசியலில் இறங்கப் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி உள்பட இன்னும் சிலர் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் பேசினோம்.

 ரஜினி

தேனி மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் பொன்.சிவா, ''தலைவர் (ரஜினி) அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் அனைவருமே 10 பேரைக் கொண்டு அரசியல் நடத்துபவர்கள். அந்த 10 பேரும் எங்கே தம் கட்சியைவிட்டுவிட்டு எம் தலைவருடன் வந்து சேர்ந்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அப்படிப் பேசுகிறார்கள்'' என்றார்.

''விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்!''

சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், ''நம் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி வருபவர்கள், மக்கள் மதிக்கும் அளவுக்கு கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோல் இப்போது இல்லை. அங்கே, வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாதவர்கள் ஆண்டுகொண்டிக்கிறார்கள். அதனால், நாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்துக்கான ஆளாக எம் தலைவரை (ரஜினியை) அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ஆலோசகர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதற்கான பயணமே இந்த ரசிகர்கள் சந்திப்பு. விரைவில், அரசியலில் பயணிக்க இருக்கும் எம் தலைவரைப் பிடிக்காதவர்கள்தான் இந்த வேண்டாதவேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களே, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்போல அரசியலுக்கு வந்தவர்கள்; அவர்களுக்கே அரசியல் முழுதும் தெரியாது. அப்படியிருக்கும்போது, அவர்கள் எம் தலைவரை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்வது அநாகரிகமானது. தற்போது  தமிழகத்தில் அவர்களுக்கு மதிப்பு இல்லை. அவர்கள், தங்களை அவ்வப்போது அடையாளப்படுத்திக்கொள்வதற்காகத்தான் இதுபோன்றதொரு விளம்பரத்தைத் தேடிக்கொள்கின்றனர். இவர்களுக்கு வேறு வேலை இல்லை. ஆகையால், இதை ஒரு பிழைப்பாகக் கையில் எடுத்துக்கொள்வர். நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்போது அதற்காக எல்லாம்  வரிந்து கட்டிக்கொண்டு களத்துக்கு வராதவர்கள், ஒரு மிகப்பெரிய மனிதருக்குப் பெரும்புகழும், மக்கள் ஆதரவும் இருக்கும்போது... அதனால் அவர் வெற்றிபெறும் சூழ்நிலை வரும்போது... அதைக்கண்டு பொறுக்காதவர்கள்தான் இப்படியான வேலைகளில் களமிறங்குகிறார்கள்'' என்றார், தெளிவாக.

ரஜினி

''சீமானே காணாமல் போய்விடுவார்!''

நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் துணைத் தலைவர் தாயப்பன், ''தலைவர் (ரஜினி) அரசியலுக்கு வர எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அனைவருமே குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்; கட்டப் பஞ்சாயத்து வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள்; ஒரு சிலருக்கு 10 பேர் தொண்டர்களாக இருக்கிறார்கள்; இன்னும் பிறருக்கு 100, 200 பேர் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு அடுத்து வேற எந்தக் கட்சியிலும் அதிக தொண்டர்கள் இல்லை. ஆனால், அந்த இரண்டு கட்சிகளுக்குச் சமமாக இருப்பது ரஜினி ரசிகர்கள் மட்டும்தான். இந்த ரசிகர்கள் அனைவரும் 42 ஆண்டு கால மன்ற உறுப்பினர்கள். ரஜினி என்கிற ஓர் ஆள் தனிப்பட்ட முறையில் நிறைய சாதித்து இருக்கிறார். அதுபோல் எம் தலைவரைப் பேசும் யாராவது சாதித்து இருக்கிறார்களா? இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் எப்போதும் எதிலுமே சாதிக்க முடியாது'' என்றவர், இறுதியாக ''தலைவர் அரசியலுக்கு வந்தால் சீமானே காணாமல் போய்விடுவார்'' என்றார். 

'' 'எதிர்ப்புகள் இருந்தால்தானே எதிலும் ஜெயிக்க முடியும்' என்கிற தத்துவம் தெரியாதவரா எம் தலைவர். எதையும் முறியடிப்போம்'' என்றார், இறுதியாய்ப் பேசிய ரஜினியின் மற்றொரு ரசிகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!