வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (24/05/2017)

கடைசி தொடர்பு:16:41 (24/05/2017)

பாலில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை!- அமைச்சர் எச்சரிக்கை

ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் நிறுவனம் ஒன்றின் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகாரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து இன்று, 'பொதுமக்கள் குடிக்கும் பாலில் யாராவது கலப்படம் செய்வது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தயாரிக்கும் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதனால் அந்தப் பாலை குடிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு வந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று, பால் கலப்படம் பற்றி புகார் வருவது உண்மைதான் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, 'சில தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பால், 10 நாள்கள் ஆகியும் கெடாமல் உள்ளது. இதைப்போல் வெகு நாள்கள் இருக்கும் பால் தூய்மையான பால் அல்ல. பொதுமக்கள் குடிக்கும் பாலில் கலப்படம் செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்படி கலப்படம் செய்யப்படும் தனியார் பால் மூலம் குழந்தைகளுக்கு புற்றுநோய்கூட வர வாய்ப்பிருக்கிறது. கலப்படம் செய்ததாக புகார் கூறப்பட்ட பால் மாதிரி புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.