சிறையிலிருந்து நான் வெளியே வர இவர்கள்தான் காரணம்! ஜாமீனில் வந்த வைகோ பேட்டி

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ 52 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

vaiko
 

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோமீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வைகோவுக்குச் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

vaiko
 

ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி, 15 நாள்கள் காவல் முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், தான் பிணையில் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்ததால், காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ. இதனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவின் காவலை ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தது. இந்நிலையில் 23ஆம் தேதி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார். தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வைகோ விடுவிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

ஜாமீனில் வெளிவந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பழிவாங்கும் நோக்கத்திலேயே என்மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால்தான் ஜாமீனில் வெளிவர ஒப்புக்கொண்டேன். மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் எழுச்சியை காவல்துறை அடக்கமுடியாது. 52 நாள்கள் சிறையிலிருந்தபோது என்னை நானே ஆய்வு செய்துகொண்டேன். அதிமுக அரசு ஓராண்டுக்காலத்துக்குள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கல்வித்துறையில் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக உள்ளன’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!