Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்போது எப்படி இருக்கிறது ஆர்.கே நகர்! #SpotVisit

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள்

'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! நாங்கள் ஆர்.கே.நகர்த்  தொகுதியை சொர்க்கபுரியாக  மாற்றாமல் விடமாட்டோம். 24 மணி நேரத்தில் நீங்கள் எப்போது அழைத்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவோம். உங்களுக்கு சேவை செய்யவே இங்கே களமிறங்கினோம்' ஏப்ரல் 10-ம் தேதி மாலை வரை ஆர்.கே.நகருக்குள் வேட்பாளர்களின் குரல்கள் இப்படித்தான் ஒலித்துக்கொண்டிருந்தன. எங்கெங்கு காணினும் கரைவேட்டிகளால் நிரம்பி, ஒரு திருவிழா போல காட்சி கண்ட ஆர்.கே.நகரின் இன்றைய நிலை...? தொகுதிக்குள் பயணித்தோம்.

சமூக ஆர்வலர் வான்மதி

''காலையில் 6 மணிக்கே வந்து கதவைத் தட்டி 'உங்களுக்கு என்ன வேணும்? நாங்க செஞ்சு தரோம். தொப்பி சின்னத்தை மட்டும் மறந்துடாதீங்க'ன்னாங்க. அடுத்து இன்னொரு டீம் வந்து 'இரட்டை விளக்கு மின்கம்பம்'னாங்க. அஞ்சு பேருக்கு ஒருத்தர்ன்னு எங்கள சுத்தி சுத்தி வந்து உபசரிச்சுக்கினு இருந்தாங்க. ஒரு தெருவுக்கு ஒரு குழுன்னு நாள் முழுக்க நாற்காலி போட்டு உக்காந்து, கவனிச்சுக்கிட்டாங்க. ஆனா இன்னைக்கு எங்ககிட்ட கொழஞ்ச அம்புட்டு ஆளுங்களையும் தேட வேண்டியதா இருக்கு. இப்போ கொழாய தொறந்தா தண்ணி வராமலும், சாக்கடைங்க மத்தியிலயும் கஷ்டப்பட்டுக்கினுதான் இருக்கோம். ஒருத்தரும் பிரச்னைய தீக்க வரலை' என்றார்கள் மார்க்கெட் தெரு வெங்கடேஷும், காஞ்சனாவும். எழில் நகர்  பரமேஸ்வரி, "சென்னையில உள்ள ஒட்டுமொத்த குப்பையும் கொடுங்கையூருலதான் கொட்டுறாங்க. அதுக்கு மத்தியிலதான் வாழுறோம். புதுசு புதுசா நோய் வருது. வாங்குற கூலி டாக்டர் செலவுக்கே போகுது.' என்றார் கண்ணீரோடு. "தண்ணி பிடிக்கிற குடம் தீப்பிடிச்சு பார்த்துருக்கீங்களா? இங்க வந்தா பாக்கலாம். பெட்ரோலிய குழாயில ஏற்படுற கசிவு எண்ணெய் அதிசயமா வர்ற தண்ணியிலயும் கலந்து வருது. அடிக்கிற வெயிலுக்கு அப்படியே தீப்பிடிச்சு எரியுது. இதெல்லாம் கவுன்சிலருங்ககிட்ட சொன்னா, 'நாங்க பதவியில இல்ல... இதெல்லாம் அதிகாரிங்கதான் பாக்கணும்'னு சொல்றாங்க. ஆனா, இதே ஆளுங்கதான், வீடு வீடா வந்து 'என்னென்னமோ' கொடுத்து, எங்க கை, காலை பிடிச்சு 'ஓட்டு போட்டுடுங்க. உங்கள ராஜா மாதிரி பாத்துகிறோம்'ன்னு சொன்னாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பா'' தலையில் அடித்துக்கொண்டார் தண்டையார்பேட்டை கீதா. 

ஆர்.கே நகர் தொகுதிவாசிகள்

வ.உ.சி நகரில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரான வான்மதி, "எங்க தெருவுக்கு எதிர்லயே அரசுக்குச் சொந்தமான ஒரு பாழடைந்த அறை இருக்கு. அங்க இரவு நேரத்துல பசங்க கஞ்சா அடிச்சுக்கிட்டு இருக்காங்க. இளவயசு பசங்களுக்குக் கஞ்சா விற்பனை செஞ்சுக்கிட்டும் இருக்காங்க. இதுல போன வாரத்துல அந்த அறைக்குள்ளேயே கஞ்சா அடிச்சுக்கிட்டிருந்த ஒரு பையன், அப்படியே தூக்கு மாட்டிக்கிட்டு தற்கொலை செஞ்சுருக்கான். அங்க தெரு விளக்கு எரியுறதேயில்லை. அந்தப் பக்கமே பெண்கள் போக முடியறதில்லை. துப்புரவு தொழிலாளர்கள், மீனவர்கள் என சாதாரண ஜனங்க  நிறைஞ்ச தொகுதி இது. அடிப்படை வாழ்வாதாரப்  பிரச்னைகளோடுதான் வாழவேண்டியிருக்கு. தீர்வுக்காக முறையிட்டா, 'எங்களால என்ன பண்ணமுடியும்?'-ன்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றாங்க. அப்பப்போ கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க போராடினாலும் மாற்றம் வரல. அ.தி.மு.க கட்சிக்காரங்ககிட்ட சொன்னா யாரும் கண்டுக்கமாட்டேங்குறாங்க. டி.டி.வி தினகரன் ஜெயிலுக்கே போய்ட்டாரு. ஜீப்ல இருந்து இறங்காம, குடை புடிச்சுக்கிட்டு வந்து வாக்கு கேட்ட தீபாவை அன்னைக்கு பார்த்ததோடு சரி.கங்கைஅமரனும் அப்போ வந்து பாட்டெல்லாம் பாடிட்டு போனதோடு சரி. ஆனா  இவங்கல்லாம்தான், அப்போ எதையெதையோ கொடுத்தாவது ஓட்டு வாங்கிடணும்னு சுத்தி சுத்தி வந்தாங்க. தேர்தல் காலத்தில், மக்களை வட்டமிடுறதும், முடிஞ்ச பின்னாடி மக்கள மறந்துபோயிடுறதும் அரசியல்வாதிகளோட வியாதி போல'' பொருமித்  தள்ளினார் வான்மதி. தொகுதி முழுக்க தண்ணீர் பஞ்சம் பட்டவர்த்தனமாக தென்பட்டது. ஆங்காங்கே உள்ள மீன் மார்க்கெட்கள் மிக மோசமான நிலையில் தென்பட்டன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை வென்ற தொகுதியும், 2001-லிருந்து அ .தி.மு.க வசமே இருக்கும் தொகுதியுமான ஆர்.கே நகர் தொகுதி மக்களின் குமுறல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் மதுசூதனனிடம் பேசினோம். "தினமும் தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் பிரச்னையை கேட்டு வருகிறேன். இங்குள்ள பாலம் மற்றும் அடிப்படை வசதிகள்கூட நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கொண்டுவந்ததே'' என்றார். 

ஆர்.கே நகர்

சி.பி.எம் வேட்பாளர் லோகநாதனோ, " தொடர்ந்து மக்களுக்காக போராடிக்கிட்டு இருக்குறவங்க நாங்க. இப்போகூட  காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் அங்குள்ள சிறு வணிக மீனவர்களை அப்புறப்படுத்தணும்னு நிர்வாகம் முயற்சி செய்ய, அதைத் தடுக்க அதிகாரிகள்கிட்ட பேசிட்டு இருக்கோம். ரேஷன் கடை முறைகேடுகளை கண்டிச்சு பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தோம். மேயர் வாசுதேவ் தெருவுல குழாய் தண்ணி வராம இருந்துச்சு, அங்கிருக்கிற டேங்க் நாங்களே ரெடி செஞ்சு தந்தோம். 'தினமும் நாங்களே தண்ணி விடுறோம்'-ன்னு  திமுக இப்போ தண்ணி  விட்டுக்கிட்டு இருக்காங்க." என்றார். தி.மு.க வேட்பாளர்  மருது கணேஷிடம் பேசினோம். "தொகுதி தண்ணி பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரேன். சிங்காரவேலர் நகர், பல்லவன் நகர்ல வீட்டு மேற்கூரை சரி பண்ணணும்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். பல இடங்கள்ல குடிநீர் பைப் போடணும்னு மனு கொடுத்திருக்கோம். பாரதியார் நகர்ல பட்டாவுக்காக மனு கொடுத்திருக்கோம். 15-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை எடுக்கணும்னு போராடுறோம்.  என்னுடைய ரொட்டீன் வொர்க்கே பைக்ல தொகுதிய சுத்துறதுதான்''' என்றவர் அதற்குச் சான்றாக அப்படங்களை நமக்கு வாட்ஸ்அப் செய்தார். தீபா, வழக்கம் போலவே தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். தொகுதியின் தற்போதைய நிலைமையை பார்க்கின்ற போது, 'அரசியல்வாதிகளே, ஆர்.கே.நகர் என்று ஒன்று உள்ளது. உங்களுக்குத் தெரியுமா ?' என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர்களை இப்போதே அடையாளம் கண்டுகொண்டால்தான் இனிவரும் தேர்தலிலாவது நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement