Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நா.காமராசன் - புதுக்கவிதையைப் பரவலாக்கிய பெருங்கவிஞன்!

காமராசன்

நா.காமராசன் எழுதிய கவிதை இது!

சந்திப்பிழை

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்...
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்!

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்!

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்!

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்!

திருநங்கைகள் குறித்த இழிவான பார்வை மட்டுமே இன்றும் இருக்கும் சூழலில் 70-களில்  கவிஞர் நா.காமராசன் எழுதிய கவிதை இது. புதுக்கவிதையைப் பரவலாக்கிய பெருமை இவருக்கு உண்டு. 'கறுப்பு மலர்கள்', 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', 'கிறுக்கன்', 'சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', 'தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்', 'ஆப்பிள் கனவு' என அவருடைய கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளே அந்த நாளில் பரபரப்பாகப் பேசப்பட்டன.

மரபுக்கவிதைகள் எழுதிவந்த இவர், புதுக்கவிதைக்கு மாறி அவற்றிலே, புதுமைகளைப் புகுத்தினார். மொழிநடை, பாடுபொருள் அனைத்திலும் அந்தப் புதுமை இருந்தது. கிராமியச் சந்தங்களுடன் படிமக் கவிதைகள் படைப்பது இவருடைய பாணியாக இருந்தது.
1942-ல் தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார். தேனி மாவட்டம், உ.அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்கு தைப்பாவை என்ற மகளும், திலீபன் என்ற மகனும் உள்ளனர்.

1964-ல் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி மாணவராக இருந்தபோது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு காலில் விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் எம்.ஜி.ஆரால், 'பல்லாண்டு வாழ்க' படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு, பணியிலிருந்து விலகி, முழு நேர எழுத்தாளரானார்.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரியத் துணைத் தலைவராக இருந்தார். அ.தி.மு.க., தி.மு.க., ஆர்.எஸ்.எஸ் எனப் பல முகாம்கள் மாறினாலும், மாறாத தமிழ்ப் பற்று இவருடைய அடையாளமாக இருந்தது. அதனால்தான் கலைஞரிடமும் எம்.ஜி.ஆரிடமும் ஜெயலலிதாவிடமும் அவரால் பதவிகளும் விருதுகளும் பெற முடிந்தது. 1991-ல் தமிழ்நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

நா.காமராசன் மே 24, 2017 அன்று உடல் நலக்குறைவால் 74-ம் அகவையில் சென்னையில் காலமானார். 'அந்த வேப்பமரம்', 'பெரியார் காவியம்' உள்ளிட்ட இவருடைய கவிதைத் தொகுப்புகள் சில, தமிழகத்திலுள்ள அரசுப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பாடமாக உள்ளன. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட திருநங்கை பற்றிய இவரது சந்திப்பிழை கவிதை, ‘கறுப்பு மலர்கள்’ தொகுப்பில் இடம்பெற்றது. இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். சிறந்த பேச்சாளர்.

கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது பெற்றவர். கவியரங்கங்களில் இவருடைய கவிதை உச்சரிப்புக்கு ஒரு ரசிக வட்டம் உண்டு. நறுக்குத் தெறிக்கும் உச்சரிப்புக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.

‘‘போய்வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா’’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காக எழுதியது. ‘‘சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’’  ரஜினிக்காக எழுதிய பாடல். செழுமையான இலக்கிய வரிகளை தமிழ்த் திரையிசைக்கு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டு வாழ்க, நீதிக்குத் தலைவணங்கு, இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம், ஊருக்கு உழைப்பவன், வெள்ளைரோஜா, கோழிகூவுது, நல்லவனுக்கு நல்லவன், இதயகோவில், உதயகீதம், நான் பாடும் பாடல், பாடும் வானம்பாடி, தங்கமகன், அன்புள்ள ரஜினிகாந்த், கை கொடுக்கும் கை, காக்கிச்சட்டை, காதல்பரிசு, முந்தானை முடிச்சு, வாழ்க வளர்க, பெரியவீட்டு பண்ணக்காரன், எங்கவீட்டு காவக்காரன், அன்புக்கட்டளை. ஓசை, ஆனந்தக் கண்ணீர், அந்த ஒரு நிமிடம், மந்திரப் புன்னகை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், மனிதனின் மறுபக்கம், ஒரு நல்லவன் ஒரு வல்லவன், கற்பகம் வந்தாச்சு, ஊர்க்குருவி, சொல்லத் துடிக்குது மனசு என 33 திரைப்படங்களுக்கு இவர் பாடல் எழுதினார்.

1983-ம் ஆண்டு என்னுடைய முதல் கவிதைத் தொகுதியான ‘பூமிக்குப் புரியவைப்போம்’ நூலை சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் வெளியிட்டு வாழ்த்திப் பேசியது எனக்குக் கிடைத்த பேறு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement