‘என் செல்லத்துக்கு நீ எப்படி பிரியாணி கொடுக்கலாம்?’ - கொலையில் முடிந்த நாய் பிரியம்

நாய்

Representational Image

சென்னையில், நாய்க்கு பிரியாணி கொடுத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது. 

சென்னை பெரம்பூர் பாலம் அருகிலுள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவர். அந்தப் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தில் வசித்துவருபவர் வெள்ளை பிரபு. இவர்கள் இருவருக்கும் நேற்று மாலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் வெள்ளைப் பிரபு, விஜய்யை இரும்பு ராடால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜய் இறந்தார். இதுகுறித்து, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் போனில் ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில், 'அது எங்கள் ஏரியா கிடையாது, நீங்கள் வேண்டுமென்றால் ஐ.சி.எப். போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவியுங்கள்' என்று போன் இணைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்து, ஐ.சி.எப். போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த பொது மக்களிடமும், 'அது எங்கள் ஏரியாவே இல்லை' என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஜய்யின் பிணம் பிளாட்பாரத்திலேயே நீண்ட நேரம் கிடந்தது.

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக, சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்ததோடு, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார் உயரதிகாரி.  அதன்பிறகு, இரண்டு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். யார், பிணத்தைக் கைப்பற்றுவது என்று இரண்டு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. கடைசியில், ஐ.சி.எப் போலீஸார், விஜய்யின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'விஜய், வெள்ளைப் பிரபு ஆகியோர் பிளாட்பாரத்தில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுப்பது வழக்கம். இதில் ஒரு நாய் குட்டி போட்டுள்ளது. கொழு கொழுவென இருந்த நாய்க்குட்டியை விஜய் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.  அதன்பிறகு, அந்தக் குட்டியை நேற்று மீண்டும் பிளாட்பாரத்தில் கொண்டுபோய் விட்டுள்ளார்.  அதைப் பார்த்த வெள்ளைப் பிரபு, எப்படி நாய் குட்டியை வீட்டுக்குக் கொண்டுபோகலாம் என்று கேட்டு, விஜய்யிடம் தகராறுசெய்துள்ளார். மேலும், நாய்க்கு விஜய், பிரியாணி போட்டதிலும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில்தான் கொலை நடந்துள்ளது. போலீஸ் எல்லைப் பிரச்னை காரணமாக வெள்ளைப் பிரபு தப்பி ஓடிவிட்டார். அவரை, பிளாட்பாரம், பிளாட்பாரமாகத் தேடியலைந்த ஐ.சி.எப் போலீஸார், இன்று மதியம் வெள்ளைப் பிரபுவை கைதுசெய்துள்ளனர்' என்றனர்.  

 விஜய் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். அப்போது, அந்த நாயும் ஆம்புலன்ஸ் பின்னால் சென்றதை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். போலீஸ் நிலையங்களில் எல்லைப் பிரச்னை என்பது நீண்ட காலமாக இருப்பதால், புகார் கொடுக்கச் செல்பவர்கள் அலைக்கழிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது, எல்லைப் பிரச்னை காரணமாக பிளாட்பாரத்திலேயே நீண்ட நேரம் ஆட்டோ டிரைவரின் பிணம் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் உயரதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை, மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!