வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (25/05/2017)

கடைசி தொடர்பு:10:34 (26/05/2017)

கல்பாக்கத்தில் அதிகரிக்கிறதா கதிர்வீச்சு..!? - அரசின் கவனத்துக்கு..! #VikatanAlert

கல்பாக்கம் அணுமின் நிலையம்

முன்குறிப்பு: கல்பாக்கம் அணு உலையில் சில அசம்பாவிதங்கள் நடப்பதாக தொடர்ந்து நமக்கு செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. எனவே, அங்கு நடப்பதை விசாரித்து, தரவுகள் இருக்கும் விஷயங்களை மட்டுமே கொண்டு இந்த செய்தி பதிகிறோம். இது அச்சமூட்டவோ, பதட்டத்தை அதிகரிக்கவோ இல்லை. உள்ள நிலவரத்தை அணு உலை நிர்வாகம் வெளிப்படையாக சொல்லாதவரை, அலையடிக்கும் வதந்திகள் பல்கிப் பெருகும்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்னைகளால் அச்சத்துக்கு ஆட்பட்டுள்ளனர் தொழிலாளர்கள். " அணுமின் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார். பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். 'என்ன நடந்தது?' என்பதைப் பற்றி அணுமின் நிலைய நிர்வாகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை' என்கின்றனர் ஊழியர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம். கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. " சென்னை அணுமின் நிலையம்(1) பராமரிப்புப் பணிக்காக கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி மூடப்பட்டது. இரண்டு மாதகால பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, கடந்த மே மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு சென்னை அணுமின் நிலையத்தில் பணியாற்றும் மூத்த பொறியாளர் பார்த்திபனுக்கு (scientific officer-G), அணுமின் நிலைய கதிர்வீச்சுப் பகுதியில் வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, இந்தப் பணிகளை தொழில்நுட்ப உதவியாளர்கள்தான் செய்வார்கள். ஆனால், இந்தமுறை பார்த்திபன் அங்கே அனுப்பப்பட்டார். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

தொழில்நுட்ப உதவியாளர்களை அங்கே அனுப்பினால், அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கதிர்வீச்சின் அளவு, சிறுநீர் பரிசோதனை உள்பட பல சோதனைகளை நடத்த வேண்டும். 'இந்தப் பரிசோதனைகளை அணுசக்தித்துறையின் சுகாதாரப் பணியாளர்கள் செய்ய வேண்டும்' என்ற விதி உள்ளது. 'இதை மீற வேண்டும்' என்பதற்காக சீனியர் லெவலில் உள்ள பார்த்திபனை அங்கே அனுப்பினார்கள். அதிகாரிகளுக்கு இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய தேவை இல்லை. அவர் அரை மணிநேரம்தான் உள்ளே இருந்தார். வெளியே வந்தவர் குளித்து முடித்துவிட்டு காபி குடித்தார். திடீரென அவருக்குத் தோள்பட்டையில் வலி வருகிறது. அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவருக்குக் கார்டியாக் அரெஸ்ட்(இதய முடக்கம்) ஏற்பட்டு இறந்துவிட்டார். என்னுடைய கேள்வியெல்லாம், இது இயற்கையான சாவா? செயற்கையான சாவா? என்பதுதான்" என அதிர்ச்சியோடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.புகழேந்தி. இவர் கல்பாக்கம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புற மருத்துவ சேவையைச் செய்து வருகிறார். 

புகழேந்திதொடர்ந்து நம்மிடம் பேசினார். " சென்னை அணுமின் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்து, பிளாண்டைத் திறந்த அன்றே பிரச்னை தொடங்கிவிட்டது. மே 20ஆம் தேதி முதல் அணுஉலை இயங்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, 'மூன்று டன் அளவுக்கு கதிர்வீச்சு தன்மையுள்ள தண்ணீர் கொட்டிவிட்டது' என்கிறார்கள். இதனால், அந்தத் தண்ணீரில் உள்ள கதிர்வீச்சு அறை முழுவதும் சூழ்ந்துவிட்டது. இதனை அளவீடு செய்வதை டி.ஏ.சி ஹவர் (Derived air concentration hour) என்கிறார்கள். இதன்படி, காற்றில் இருக்கக் கூடிய கதிர்வீச்சின் அளவைக் கணக்கெடுத்தார்கள். தொழில்நுட்ப விதிகளின்படி, 1000 டி.ஏ.சி ஹவர் அளவுக்கு கதிர்வீச்சு இருந்தால் பிளாண்ட்டை இழுத்து மூட வேண்டும் என்பது அணுசக்தி விதி.

கதிர்வீச்சு தண்ணீர் கசியும்போது இந்த டி.ஏ.சியை அளப்பார்கள். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ஆயிரம் டி.ஏ.சியில் இருந்து பத்தாயிரம் டி.ஏ.சி வரைக்கும் கதிர்வீச்சு தன்மை அதிகரித்துவிட்டது என்பதுதான். இப்படி ஏதாவது நடந்தால், தொழிலாளர்களுக்கு உடனே டிஸ்பிளேவில் போட்டுக் காட்ட வேண்டும். இந்தமுறை எந்த டிஸ்பிளேவிலும் இதைக் காட்டவில்லை. 'ஆயிரம் டி.ஏ.சி ஹவர் வந்தாலே மூட வேண்டும்' என்ற விதியை அணுமின் நிலைய நிர்வாகம் மீறிவிட்டது. அதேபோல், சில நாட்களுக்கு முன்பு, ' கட்டடத்தைவிட்டு(Reactor building-1) உடனே வெளியேறுங்கள்' என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அணுமின் நிலைய நிர்வாகம். கதிர்வீச்சு அளவு அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். காற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. பொறியியல் வல்லுநர் பார்த்திபன் வேலை பார்த்த இடத்தில் இருந்த கதிர்வீச்சின் அளவையும் நிர்வாகம் வெளியிடவில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 'ஓர் ஊழியர் எவ்வளவு கதிர்வீச்சை உள்வாங்கலாம்?' என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் சிலவற்றை வரையறை செய்திருக்கிறது. அதன்படி, உள்கதிர்வீச்சின் அளவு 10 சதவீதமாகவும் வெளிக் கதிர்வீச்சின் அளவு 90 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் வெளிக் கதிர்வீச்சால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

கல்பாக்கம் 

ஆனால், 'சென்னை அணுமின் நிலையத்தில் உள்கதிர்வீச்சின் அளவு 50 முதல் 60 சதவீதத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது' என ஊழியர்கள் கதறுகிறார்கள். ' எங்களால் இதை வெளியில் சொல்ல முடியவில்லை. மிக மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்' என அழுகின்றனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வரையில் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை 14 மணி நேரம் வேலை பார்க்குமாறு நிர்வாகம் நிர்பந்திருக்கிறது. கதிர்வீச்சுத் தன்மையால், சீனிவாசன், பெருமாள் ஆகிய இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்களுக்குக் கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கந்தன் என்ற ஊழியருக்கு பித்தப்பை புற்றுநோய் வந்துள்ளதாக தகவல் வருகிறது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சம்பவங்களைப் பற்றி, அணுமின் நிலைய ஊழியர் சங்கத்தின் பிரநிதிகள், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ' மனித உயிர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை' எனக் காட்டமாக விமர்சித்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் இருந்து நிபுணர்கள் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறந்துபோன அதிகாரி பார்த்திபனின் மனைவி லட்சுமி பிரியாவும் மருத்துவர்தான். அணுசக்தி மருத்துவமனையில்தான் அவர் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவரின் இறப்பு குறித்து, அவருக்கும் முழுமையான தகவல்கள் சொல்லப்படவில்லை. கடந்த 20 ஆம் தேதி முதலே அதிகாரிகளால் பிளாண்ட்டை இயக்க முடியவில்லை. 'அணுஉலையில் பிரச்னை என்பதால் மூடப்பட்டுள்ளது' என அணுமின் நிலைய நிர்வாகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன பிரச்னை என்பதைப் பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை" என ஆதங்கப்பட்டவர், 

" என்னுடைய கேள்வியெல்லாம் ஒன்றுதான். அண்மையில், பத்து அணுஉலைகளுக்கு நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. 'ஒவ்வொரு அணுஉலையும் 700 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது' என்கிறார்கள். இந்தியாவில் உள்ள அணுஉலைகள் என்ன மாடலில் இயங்குகிறதோ, அதே மாடலில்தான் புதிய அணுஉலைகளும் திறக்கப்பட இருக்கின்றன. 'அணுமின்சாரம் என்பது சுத்தமான ஆற்றல். இதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்' எனச் சொல்கின்றவர்கள், ' இது மிகவும் பாதுகாப்பானது' என்ற சொல்லையும் அழுத்திச் சொல்கிறார்கள். கல்பாக்கத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், 'இது உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா?' என்ற கேள்விதான் எழுகிறது" என்றார் கவலையுடன். 

சென்னை அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து அறிவதற்காக, ஆப்ரேட்டிங் கண்காணிப்பாளர் ராஜேஷ் ரோஸ் என்பவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் முனைப்பு தென்படவில்லை. சட்ட ஆலோசகர் ராஜுவிடம் பேசினோம். " அணுஉலையில் என்ன பிரச்னை என்பதைப் பற்றியெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. பதில் சொல்ல வேண்டிய இடத்திலும் நான் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.  கல்பாக்கம் அணு உலையில் என்ன நடக்கிறது? அணு உலை நிர்வாகம் திறந்த மனதோடு பகிர்ந்து கொண்டால், பரிசீலனைக்குப் பிறகு அவற்றைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்..!


டிரெண்டிங் @ விகடன்