' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?'   -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? | Was Modi convinced with Sasikala's demands

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (25/05/2017)

கடைசி தொடர்பு:12:25 (26/05/2017)

' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?'   -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி?

சசிகலா

டப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை' என விவரித்த முதல்வர், ' சட்டசபையில் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்' என்றார். அதேநேரம், 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும்' என இரண்டு அணிகளும் மோடியிடம் வலியுறுத்தியுள்ளன. " அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். ' அதுதான் அம்மாவின் விருப்பம்' எனவும் இரண்டு அணிகளின் தலைவர்களிடமும்  எடுத்துக் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் அணியினர், ' அணிகள் இணைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று கூறிக் கொண்டே, அவர்களுடன் மறைமுகத் தொடர்பில் இருக்கிறார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். அமைச்சர்கள் சிலர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கின்றனர். தலைமைக் கழகத்தில் இருந்து சசிகலா பேனரை அப்புறப்படுத்தியதோடு சரி. அதன்பிறகு, தேர்தல் ஆணையத்துக்கான பிரமாண பத்திரத்திலும் சசிகலாவையே முன்னிறுத்துகின்றனர்' என சுட்டிக் காட்டினர். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்ட பிரதமர், எந்தக் கருத்துகளையும் கூறவில்லை. 'பிரதமர் எங்கள் பக்கம்தான்' என்று காட்டிக் கொள்ள இரண்டு அணிகளும் போட்டி போடுகின்றன. நேற்று பிரதமரை சந்தித்த எடப்பாடி பழனிசாமியும், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு உள்பட சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட்டார். சந்திப்பு முடிந்து வெளியே வந்தவர், ' மீட்டிங் சக்சஸ்' என அருகில் இருந்த அவரது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். ' பிரதமரிடம் என்ன பேசினார்?' என்பதை வெளியில் சொல்லவில்லை. இதன்பின்னால் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்றார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

எடப்பாடி பழனிசாமிபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த மன்னார்குடி உறவினர் ஒருவரிடம் பேசினோம். " அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் ரிவியூ மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசிய வழக்கறிஞர்கள், ' உச்ச நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட ரிவியூ மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி, நமது மனுவின் மீதான விசாரணை நடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. எனவே, ஜூன் 3ஆம் தேதி மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலே, நாம் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய முடியும்' எனச் சொல்ல, இதற்குப் பதில் அளித்த சசிகலா, ' ரிவியூ மனு மீது தண்டனை குறைப்பு நடக்குமா? இதே தண்டனை நீடிக்குமா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வெளியில் வர வேண்டும். கட்சி அழிந்துவிடக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது' எனக் கூறியிருக்கிறார். 

இதன்பிறகு, தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர் ஒருவரிடம், ' மத்திய அரசின் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு சென்றிருக்கிறோம். ' எந்தவிதத்தில் நாங்கள் எதிரியாகப் பார்க்கப்படுகிறோம். உங்களுக்கு ஜெயலலிதா மீதிருந்த கோபமே குறைந்துவிட்டது. உங்களுக்கு எதிராக நான் எந்த இடத்திலும் பேசியதில்லை. செயல்பட்டதில்லை. மத்திய அரசுக்கு எதிராக நான் செய்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள். காலம் முழுக்க சிறையிலேயே இருந்துவிடுகிறேன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசியதெல்லாம், நான் பேசியதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஜெயலலிதா இறந்த பிறகு, ' போயஸ் கார்டனுக்குள் என் கணவர் வரலாமா?' என உறவினர்கள் கேட்டனர். ' அக்கா இருந்தபோது என்ன நிலை இருந்ததோ, அப்படியே நீடிக்கட்டும். அவர் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டேன். அப்படி இருக்க நான், உங்களுக்கு எதிராக என்ன திட்டத்தைத் தீட்டி விட முடியும்?' என பிரதமர் கவனத்துக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன். என்னுடைய கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார் என நம்புகிறேன்' என விவரித்திருக்கிறார். அவர் யார் மூலம் பா.ஜ.கவுக்குத் தூது அனுப்பினார் என்ற தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ரிவியூ மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், சசிகலா மீதான பா.ஜ.கவின் கோபம் குறைந்துவிட்டது என அர்த்தம்" என்றார் விரிவாக. 

' எடப்பாடி பழனிசாமியா? பன்னீர்செல்வமா?' என்ற யுத்தம் தீவிரமடையும் சூழலில், ' நான்கு மாதங்களுக்குள் அரசியல் சூழல்கள் தனக்குச் சாதகமாக மாறும். சிறையில் இருந்து வரும்போது, என்னை வரவேற்கக் கூடிய முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி இருப்பார்' என நம்பிக்கையோடு பேசுகிறார் சசிகலா. பன்னீர்செல்வத்தை அரசியலில் இருந்து ஓரம்கட்டும் வேலைகளில் மன்னார்குடி உறவுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close