Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொகுதிக்கு 10 லட்சம் - களைக்கட்டும் தண்ணீர் விற்பனை !                                                    தண்ணீர் லாரிக்கு காத்திருக்கும் காலிக் குடங்கள்                              

ருப்பை தக்க வைத்துக்கொள்ள ஒரு அணியும், இருப்பை உருவாக்கிக்கொள்ள இன்னொரு அணியுமாக... இருப்பு கொள்ளாமல், தவித்துக் கொண்டிருக்கும் இருதலைக் கொள்ளி எறும்பாகக் கிடக்கிறது, தமிழ்நாடும், தமிழ்நாட்டு அரசியலும். 'கூவத்தூரில் 15 நாட்கள் அடைந்து கிடந்தது இதே எம்.எல்.ஏ பதவியில் தொடரத்தானா? நாங்கள் மந்திரிகளாகி காசு பார்க்க வேண்டாமா?' என்பதே அன்றாட கோரிக்கை மனுக்களாக கோட்டையை குப்பைத் தொட்டி ஆக்கி வைத்திருக்கிறது.'ஆட்சிக்கு வந்து ஓராண்டில், மக்களின் அத்தியாவசியப் பிரச்னைகளைத் தீர்க்க மந்திரிமார்கள் எடுத்த நடவடிக்கை என்ன?'  என்று  செய்தியாளர்கள் காலையில் கேட்டால், 'மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்...' என்று ஆரம்பித்து, ஆரம்பித்த இடத்திலேயே சுழன்று நிற்பதற்குள் லஞ்ச் பிரேக் வந்து விடுகிறது. கடந்த ஆண்டு, 'இது போதுமா, இன்னும் வேணுமா' என்று இயற்கை எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், பெய்த தேன் மழையை அப்படியே உப்புக் கடலுக்கு திருப்பிய தப்பைத்தான் அதிகார மையங்கள் செய்தன. நகரின் பெரும்பாலான இடங்களில் அரை அடி உயரத்துக்கு போடப்பட்ட சிமெண்ட் சாலைகளில் வாகனங்கள் நன்றாக ஓடுகிறது, சாலையைத் துளைத்து பூமிக்கு அடியில் தண்ணீர் ஓட வழியிருக்கிறதா என்றால் இல்லை.தேசிய நெடுஞ்சாலைகளில், இருபுறமும் நின்றிருந்த பச்சையம் போர்த்திய மரங்களின் வேர்த்தடம் கூடத் தெரியவில்லை. நகர்ப்புறங்களிலும் அதே நிலைமைதான். மரங்களே இல்லை, ஆனால் மழை வேண்டும்! எப்படி சாத்தியம்? இருப்பினும் நல்வாய்ப்பாக பொத்துக் கொண்டு மழை கொட்டினால், அதைத் தேக்கி வைக்கவும் வழியில்லை.  மழைவெள்ளத்தில், பெரிதும் பாதித்த சென்னை புறநகரான தாம்பரம் பகுதியில், இன்றைக்கு தண்ணீர்ப்பஞ்சம் மிக மோசமாக இருக்கிறது. ஒரு குடம் குடிநீர் 15 ரூபாய் என்று (22-5-2017) கடந்த திங்கட்கிழமை முதல் எழுதப்படாத விலை நிர்ணயம் அமலுக்கு வந்திருக்கிறது.தண்ணீர் டேங்கர்  ஓட்டுநரும், உள்ளூரில் குடங்களுக்கு தண்ணீர் அளந்து விடுகிறவரும் அந்த வகையில், ஒரு லாரிக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் ஈட்டுகிறார்கள். ஒரு தெருவுக்குள் வருகிற தண்ணீர் லாரிக்கு மட்டுமே இந்த கணக்கு. ஆனாலும், 'குடிநீரை விற்றால் ஜாமீனில் வெளியில் விட முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்'  என்று சம்பந்தப்பட்ட அத்தனை இடங்களிலும் விளம்பரம் செய்து வைத்திருக்கிறார்கள். 


தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில், அதிகபட்சமாகவே ஐம்பது தெருக்கள்தான் இருக்கிறது என்ற கணக்கில் பார்த்தாலும் நாள் ஒன்றுக்கு பத்து லட்ச ரூபாய்க்கு ஒரு தொகுதியில் மட்டுமே தண்ணீர் விற்பனை நடக்கிறது.  தமிழகத்தில் இருக்கிற 234 தொகுதிகளில், இப்படி எத்தனை தொகுதிகளில் தண்ணீர் விற்பனை நடக்கிறது என்பது அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், விற்பனையில் கிடைக்கும் பணம் என்பது  குறைந்த அளவிலானது அல்ல.டேங்கர் லாரிகளில் விற்பனையாகும் தண்ணீர் விவகாரம் இப்படியிருக்க, தெருக்களில் உள்ள பொதுக்குழாய்களின்  தண்ணீர்க்கதை  இதையும் மிஞ்சிடும் அளவில் உள்ளது. உள்ளூர் தாதாவாக வலம் வரும் ஆட்களின் கையில்தான் அந்த பொதுக்குழாய்களின் கைப்பிடியே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தனியார் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சினிமா தியேட்டர்கள் என்று  முதல் சுற்று குழாய் நீரை விற்று விட்ட பின்னரே இந்த தாதாக்கள் பொதுமக்களுக்கு தண்ணீர்விட முன்வருகிறார்கள்.சென்னையின் பல இடங்களில், தண்ணீர்ப் பிரச்னை  காவல்நிலையப் புகாராக மாறிக் கொண்டிருக்கிறது. அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன், அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து பேசிதான் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். ஆனால், அப்படி எந்த அதிசயமும் இதுவரையில் நடந்து விடவில்லை. 'எத்தனை நாள்களுக்கு ஆட்சி இருக்கும்' என்ற பேச்சு வார்த்தைக்கே  அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.போலீசார் நிலையும் பாவமாகத்தான் இருக்கிறது. ''இருக்கிற வேலையைப் பார்க்கவே ஸ்டேஷனில் ஆள் பற்றாக்குறை. இதில் தண்ணீர்க் குழாய் விவகாரமா?'' என்றே போலீஸ் தரப்பிலிருந்து சலிப்புக் குரல் கேட்கிறது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், தி.மு.க-வின் 89 எம்.எல்.ஏ-க்களையும் அவரவர் ஊரில்,   ஆறு, ஏரி, கிணறு, குளம் என்று நீர்நிலைகளை தூர் எடுக்கும் பணியை செய்யும்படி இந்த நேரத்தில் உத்தரவிட்டது சற்றே ஆறுதல். சைதாப்பேட்டை, கொளத்தூர் போன்ற பகுதிகளில், ஸ்டாலினே களத்தில் இறங்கி வேலையையும் தொடங்கி விட்டார். கடந்த காலங்களில், வி.ஐ.பி தொகுதியாக கருதப்பட்ட சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு இப்போது எம்.எல்.ஏ இல்லை. ஆர்.கே நகர்த் தொகுதியின் கிழக்குப் பகுதி தி.மு.க பொறுப்பாளரான மருதுகணேஷ், தொகுதியின்  42-வது வட்டத்தில் குடிநீர் வாரியம் மூலமாக தெருவில், புதிய குழாய்களை பதித்துக் கொண்டிருக்கிறார்.இதுகுறித்துப் பேசும் மருதுகணேஷ், "இது தொடக்கம்தான்... தளபதி ஸ்டாலின், நீர்நிலைகளில் தூர் வாரும் பணியை மேற்கொள்ள எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அத்தோடு மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில், கவனம் செலுத்தவும் கூறியிருக்கிறார். ஆர்.கே நகர்த் தொகுதியின் பல இடங்களில், பழைய பைப் லைன் இணைப்புகளே இருக்கின்றன. சில இடங்களில் அப்படியான இணைப்பும் இல்லை. மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் மூலமாக வாரிய அதிகாரிகளுக்கு மனு அளித்து, இந்த வேலை நடக்கிறது" என்றார்.


 இயற்கையை அழித்தோம், நீர்நிலைகளை வணிக வளாகங்களாக மாற்றினோம். அதன் விளைவைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைவிட அதிகமாய் சந்திக்கப் போவது நம்முடைய அடுத்த தலைமுறைதான் என்பதை எண்ணிப் பார்க்கவும் தவறிவிட்டோம்.இந்தியாவின் நீர்வளத்தைக் கொண்டு உலக நாடுகளுக்கே நீர் ஏற்றுமதி செய்யலாம் என்ற பெருமையை நாமே குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கான 'யுனிசெஃப்' அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 'தண்ணீர் பகிர்வில், தற்போதுள்ள நிலை நீடித்தால், 2040 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி குழந்தைகள், தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும். சுத்தமான நீர் கிடைக்காமல், 66 கோடியே, 30 லட்சம் மக்கள் துன்புறுகின்றனர். 5 வயதுக்குட்பட்ட  எண்ணூறுக்கும் அதிகமான குழந்தைகள், நீரினால் உருவாகும் நோய்களால், ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர்' என்று எச்சரிக்கிறது. ஐ.நா. என்ன சொல்கிறது தெரியுமா? 'தண்ணீர் பயன்படுத்தப்படும் முறையில் சரியான நிர்வாகம் இல்லையென்றால்,  2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் 40 விழுக்காடு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்' என்கிறது.இவைகளில் எதையும் நாங்கள் கேட்கவோ, வாசிக்கவோ தயாராக இல்லை எனும்போது, நா வறண்டு சாகவும், தண்ணீர்த் தேவைக்கான கண்ணீரை வடிக்கவும் தயாராகுவதைத் தவிர வேறு வழியில்லை...!


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement