தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி காலமானார்

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி காலமானார்.

 

DMK Periyasamy

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமானவர் என்.பெரியசாமி. இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர் கருணாநிதியால், 'முரட்டு பக்தன்' என அழைக்கப்பட்டவர். பெரியசாமியின் மகள்தான், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தூத்துக்குடி எம்எல்ஏ-வுமான கீதா ஜீவன்.

கடந்த சில மாதங்களாகவே, உடல்நலம் குன்றியிருந்தார் பெரியசாமி. அவருக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. 
அவரது உடல், தூத்துக்குடிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கில், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே," பெரியசாமியின் மறைவுக்கு தி.மு.க சார்பில், மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மூன்று நாள்களுக்கு தி.மு.க-வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். தி.மு.க சார்பாக நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. 

இவரது உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியசாமியின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது. 36 தொழிற்சங்கங்களுக்கு தலைவராக இருந்து, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் பெரியசாமி" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்,பெரியசாமியின் உடலுக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவர் செய்தியாளர்களிடம், "26 ஆண்டு கால நண்பரின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.  அவரது இழப்பு, தெற்கு சீமை தி.மு.க-வுக்கு பெரிய இழப்பு" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!