மூன்றாண்டு ஆட்சி நிறைவு : அ.தி.மு.க பாணியில் ஸ்டிக்கர் ஒட்டும் பி.ஜே.பி!

பி.ஜே.பி அரசின் ஆட்சி, இன்றுடன் மூன்றாண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி மாநில முதல்வர்கள் ஆகியோர், நாடு முழுவதும் சென்று மத்திய அரசின் செயல்பாடுகள்குறித்து கருத்துக் கேட்க உள்ளனர். அப்போது, பி.ஜே.பி அரசின் மூன்றாண்டுச் செயல்பாடுகள் குறித்தும், மக்களிடம் விளக்கமளிக்க உள்ளனர். 


இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு காலச் சாதனைகுறித்த இணையதளச் சேவையை, தி.நகரிலுள்ள பி.ஜே.பி அலுவலகத்தில், பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும், பி.ஜே.பி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஹெச்.ராஜா கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு அதன் திட்டங்களாகப் பயன்படுத்திவருகிறது. அதனால்தான்,  ஸ்டிக்கர் ஒட்டி சாதனைகளை விளக்கி வருகிறோம். வீடுகள், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். விவசாயிகள், கால்நடைகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

மூன்றாண்டு காலச் சாதனைகளை இன்று தொடங்கி, அடுத்த மாதம் 15-ம் தேதி வரை  மத்திய அமைச்சர்களும் பி.ஜே.பி முதல்வர்களும் நாடு முழுவதும் சென்று விளக்குவர்.  பிரதமர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாகக் கூறிய ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வராக வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஸ்டாலின், விரக்தி அடைந்திருக்கிறார்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!