'குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு...!?'  - மோடிக்கு எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதி | Did Edappadi Palanisamy gave assurance to Modi on the support for Presidential Election?

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (26/05/2017)

கடைசி தொடர்பு:13:24 (26/05/2017)

'குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு...!?'  - மோடிக்கு எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதி

மோடி-எடப்பாடி பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டுத் திரும்பியிருப்பது அரசியல்ரீதியாக பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ' குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட அரசியல்ரீதியாக பா.ஜ.கவுடனான நட்பு குறித்து விரிவாகவே எடுத்துக் கூறியிருக்கிறார் முதல்வர். அவர் எதிர்பார்த்தபடியே இந்த சந்திப்பு நல்லபடியாக முடிந்துவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் பா.ஜ.க மீதான தங்கள் பாசத்தை பல வழிகளில் தெரியப்படுத்தி வருகின்றனர். பிரதமருடன் நடந்த சந்திப்பு குறித்துப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, ' ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ளது. அதேபோல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்' எனப் பேச, இதனைக் கண்டு அதிர்ந்துபோன முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ' நாங்கள் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் உறுதியளித்திருக்கிறார்' என்றார். இரண்டு அணிகளுக்குள்ளும் நடக்கும் விவகாரம் குறித்துப் பதில் அளித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ' அரசியல் காரணங்களுக்காகவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, அ.தி.மு.கவை இரண்டாக உடைப்பதற்கும் உடைந்த அ.தி.மு.கவை ஒன்றாக இணைப்பதற்கும் கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போல பிரதமர் மோடி இந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்' என்றார் கிண்டல் தொனியில். ஸ்டாலின் கூறிய கருத்து அரசியல்ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. 

" மின்துறை அமைச்சர் தங்கமணி, பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அரசியல்ரீதியாக சில உறுதிமொழிகளை அளிக்க விரும்பினார் எடப்பாடி பழனிசாமி. நேற்று முன்தினம் நடந்த சந்திப்பில் அனைத்து விஷயங்களும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது, அவருடைய உறவினர் ஒருவரை மட்டும் உடன் அழைத்துச் சென்றார். 'அவர் யார்?' என்ற கேள்விக்குப் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ' மொழிப் பிரச்னைக்காக உறவினரை அழைத்துச் சென்றிருக்கலாம்' எனக் கூறினார். அந்தளவுக்கு பிரதமருடனான சந்திப்பில் சில முக்கிய விஷயங்களைத் தனிப்பட்ட முறையில் பேசத் திட்டமிட்டார் பழனிசாமி.

தமிழக அரசியல் சூழல்கள் பற்றிப் பேசத் தொடங்குவதற்கு முன்பாக, ' தேசிய எண்ணம் கொண்ட பெரும்பான்மை சமூகத்திலிருந்து நான் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது' என உற்சாகத்தோடு தொடங்கினார் பழனிசாமி. தொடர்ந்து, ' குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் யாரை நிறுத்தினாலும், நாங்கள் ஆதரிப்போம். அ.தி.மு.கவில் உள்ள பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் உங்களை ஆதரிப்பார்கள். என்னைத் தாண்டி அவர்கள் வேறு எந்த முடிவையும் எடுத்துவிட மாட்டார்கள். வரக் கூடிய தேர்தல்களில் கூட்டணி அமைத்தாலும், எங்கள் வாக்குகள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாக வந்து சேரும்' என விளக்கியிருக்கிறார். இதை மலர்ச்சியுடன் கேட்டுக்கொண்டார் பிரதமர். சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது, ' பிரதமருடனான சந்திப்பு நிறைவை அளிக்கிறது' என சக அமைச்சர்களிடம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர். 

இதையடுத்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " அ.தி.மு.கவில் பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பிரதமர் மோடியை விமர்சிக்கின்றனர். எம்.எல்.ஏக்கள் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உட்பட அ.தி.மு.கவின் பேச்சாளர்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்களைத் தவிர, சசிகலா ஆதரவாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் சிலரும் எம்.எல்.ஏக்கள் சிலரும் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, ' இவர்கள் பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பார்களா?' என்ற சந்தேகம் பா.ஜ.க தலைமைக்கு இருந்துள்ளது. இதற்குப் பதில் அளித்த தமிழக அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், ' இவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் காங்கிரஸ் பக்கம் போக மாட்டார்கள். அவ்வாறு சென்றால், என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அமைச்சர்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனர். ஆட்சியில் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை அவர்கள் ஆதரிப்பார்கள். சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க ஆதரவு நிலைக்கு வருவார்கள்' என உறுதியளித்தார். இதனை நேரிடையாகத் தெரிவிக்கத்தான் டெல்லி சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டார் முதல்வர் பழனிசாமி. மத்தியில் உள்ள அரசோடு எடப்பாடி பழனிசாமி அதிக நெருக்கம் காட்டுவதை பன்னீர்செல்வம் அணியினர் ரசிக்கவில்லை. சசிகலா தரப்புடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் வைத்துள்ள ரகசிய உடன்பாடு குறித்தும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு பா.ஜ.க தரப்பிடமிருந்து எந்த விளைவுகளும் வெளிப்படவில்லை" என்றார் விரிவாக. 

'குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற வேண்டும்' என்ற ஒற்றை நோக்கோடு வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ' தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின்மீது கூடுதல் கவனம் செலுத்துவார். அப்போது இலை இருக்குமா? தாமரை மலருமா?' என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 


டிரெண்டிங் @ விகடன்