வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (26/05/2017)

கடைசி தொடர்பு:13:27 (26/05/2017)

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், `குரூப்-2' தேர்வுக்கான அறிவிப்பை 27.04.2017 அன்று வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் (26.05.2017). தேர்வு, ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மூலம் நேர்முகத் தேர்வு அல்லாத முறையில் 1,953 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

குரூப் 2

இந்தத் தேர்வை, பட்டப்படிப்பு படித்த அனைவரும் எழுதலாம். பொதுப்பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. குரூப்-2 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைமைச் செயலகத்திலும், தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்திலும் க்ளார்க் பணி, தொழில் மற்றும் வணிகத்துறை, பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நில அளவைத்துறை, உணவு வழங்கல்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, பள்ளி, கல்வித்துறை, வனத்துறை மற்றும் வணிகவரித் துறை போன்றவற்றில் உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்படுவர்.

தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தில் முதல்முறையாக ஒருமுறை பதிவு செய்பவர்களாக இருந்தால், 150 ரூபாய் கட்டணமும், இந்த ஆண்டு மார்ச் முதல் தேதிக்கு முன்பு ஒருமுறை பதிவு செய்தவர்கள் 50 ரூபாய் கட்டணமும் செலுத்திட வேண்டும். தேர்வுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், உடல் ஊனமுற்றோர், கைம்பெண் போன்றோருக்கு முழுத் தேர்வுக்கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மூன்று முறைக்குக் குறைவாகத் தேர்வு வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கட்டண விலக்கு சலுகையைப் பெறலாம். இதைப்போலவே முன்னாள் ராணுவத்தினர் இரண்டு முறைக்குக் குறைவாக தேர்வு வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. 

பொதுப் பிரிவினருக்கு 01.07.2017 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற வயது வரம்பு உண்டு. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ளது. 

இந்தத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் பொது அறிவு பிரிவிலிருந்து 75 கேள்விகளும், திறன் அறிவுப் பிரிவிலிருந்து 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவிலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். அனைத்து பிரிவினர்களும் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சியை வழங்க முன்வந்திருக்கிறது. மாவட்ட நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கு என நிறைய புத்தகங்களை வாங்கியுள்ளது. இதை குரூப்-2 தேர்வுக்குத் தயாராகிவருபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, www.tnpsc.gov.in/, www.tnpscexams.net/ மற்றும் www.tnpscexams.in இணையத்தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 

சிறந்த முறையில் தயாராகுங்கள்! வெற்றிபெற வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்