Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகள், ஓராண்டில் செய்தது இதுதான்! அ.தி.மு.க ஆட்சியைப் பட்டியல்போட்டு விளாசும் தலைவர்!

'தமிழக மக்கள், தாங்கொணாத் துயரத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது, அ.தி.மு.க-வின் இரு அணிகளும், ஊழல்செய்து சேர்த்த சொத்துக்களைப் பாதுகாக்கவும் அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்ஜியமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவுபெறுகிறது. அனைத்துத் துறைகளிலும் அ.தி.மு.க அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது. உதாரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பல வருடங்களாக சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பிறகு, அதில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதை சாதனையாக விளம்பரப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன்பிறகு அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது. வறட்சி, விவசாயம் பொய்த்துப்போனது ஆகியவற்றால், விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டோ, அதிர்ச்சியாலோ இறந்துகொண்டிருக்கும்போது, விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல்செய்துள்ளது. தமிழக மக்களின் பிரச்னைகள்குறித்து அ.தி.மு.க-வின் அணுகுமுறைக்கு இது ஒரு சோறு. விவசாய வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையிலிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் அளிப்பதற்கு, சட்டத்தைக் காட்டி மறுத்த அரசாங்கம், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும்போது, கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கே  வேலை அளிக்க மறுத்ததோடு, வேலைசெய்த நாள்களுக்கான கூலியையும், ஐந்து மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் துயரப்படுத்திக்கொண்டிருக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல  பொதுவிநியோக முறையையும் சீரழித்திருக்கிறது இந்த அரசு. ஏறத்தாழ ஏழு மாதங்களாக உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அரிசிக்குப் பதிலாக கோதுமையைத் திணிக்கும் நிலையுள்ளது. ஆதாரைக் காட்டி, 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்பொருள்கள் மறுக்கப்பட்டுள்ளது. கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 5 முதல் 10 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளோரையும் சேர்த்து, ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடு, தொலைநோக்குத் திட்டம் 2023 என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தாலும், சில 100 பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் இந்தக் காலத்தில் துவக்கப்படவில்லை.

மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறை தொடர்கின்றன. கூலிப்படையினரால் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநிலஅரசு ஏவிவிடுகிறது. ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிவரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும் அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை, மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன்மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கையிலிருந்து அ.தி.மு.க அரசு விலகிச்செல்கிறது.

ஊழல், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் அரசின் எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது. பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் முதல் கீழ்நிலைப் பணியாளர்  வரை அரசுப் பணிகளில் ஒவ்வொரு நியமனத்துக்கும் விலை தீர்மானிக்கப்பட்டு, கையூட்டு கொடுத்தால்தான் வேலை என்பது விதியாகிவிட்டது. கிரானைட் கொள்ளை சம்பந்தமாக சகாயம் ஐஏஎஸ்,  நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் அளித்த அறிக்கையை, அ.தி.மு.க அரசு இன்று வரையில் சட்டமன்றத்திலும் வைக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்று மணல் கொள்ளை தங்குதடையின்றித் தொடர்கிறது. தமிழகத்தின் நிர்வாகம் எத்தனை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு போக்குவரத்துத்துறை நல்ல உதாரணம். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள், ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை என்பதோடு தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம்செய்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் கட்டவேண்டிய தொகையைக்கூட போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதலின் படியே, அன்றாடச் செலவுகளுக்கு கபளீகரம்செய்தன. பள்ளிக் கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது. ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவை, மத்தியில் ஆளும் பா.ஜ.க பயன்படுத்தி, அச்சுறுத்தி இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச்செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததற்காக தினகரன்மீது வழக்கு, சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் 300 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இருந்த பதிவு, ஆகிய ஊழல் முறைகேடுகள்மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மத்திய பா.ஜ.க இந்த இரண்டு கோஷ்டிகளையும் மிரட்டி தனது கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. அ.தி.மு.க-வின் இரண்டு கோஷ்டிகளும் மாநில மக்களின் நலன்களைக் காவு கொடுத்துவிட்டு, பா.ஜ.க-வோடு நெருக்கமாகச் செல்வதற்கு போட்டிபோட்டு வருகின்றனர். நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் உணவுப்பொருள் ஒதுக்கீட்டை குறைப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வார்தா புயல் - வறட்சி நிவாரணத்துக்கு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது போன்ற மத்திய அரசின் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, இரண்டு கோஷ்டிகளும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். தமிழக மக்கள் தாங்கொணாத் துயரத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது, அ.தி.மு.க-வின் இரு அணிகளும், ஊழல்செய்து சேர்த்த சொத்துக்களைப் பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான், கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது. மொத்தத்தில், அ.தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சி, மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement