Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிச்சை எடுத்துதான் புள்ளைங்கள படிக்க வைக்கிறேன்' பிளாட்பார லட்சுமி!

லட்சுமி

இரவு நேர பனிப்பொழுதில் சென்னை, ஒயிட்ஸ் சாலையின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். பளீர் முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தன வாகனங்கள். சாலையோர நடைமேடையில் அந்தக் காட்சி என் வேகத்தைக் குறைத்தது.

 

 

 

ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் சிரித்துப் பேசியவாறு அன்பைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே குழந்தைகள் உறக்கத்தில் இருந்தன. அவர்களை என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. அவர்களை நெருங்கிப் பேச்சுக்கொடுத்தேன்.

''அக்கா, உங்களோடு கொஞ்சம் பேசணும். பக்கத்துல உட்காரலாமா?'' என்று கேட்டேன்.

''உட்காரு கண்ணு. எங்க பக்கத்துல யாரும் நின்னுகூட பேச மாட்டாங்க. உனக்கு என்ன வேணும்?'' என்று கேட்டவரின் குரலில் ஆச்சர்யம்.

''உங்களைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா அக்கா?" என்று கேட்டதும் அவர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

"என் பேரு லட்சுமி. என் வீட்டுக்காரர் பேரு வெங்கடேஷ். எங்களுக்கு ரெண்டுப் பெண் குழந்தைங்க. சொந்த ஊர் திருப்பத்தூர் பக்கத்துல கிராமம். என் சின்ன வயசுலேயே அப்பா, அம்மா இறந்துட்டாங்க. சொந்தக்காரங்க என்னைப் பிச்சை எடுக்கிற கும்பல்கிட்டே வித்துட்டாங்க. சின்ன வயசிலிருந்தே பிச்சை எடுக்கிறது பொழப்பாயிடுச்சு. எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கூடத்துக்குப் போறதைப் பார்க்கும்போது ரொம்ப ஏக்கமா இருக்கும். நாம எதுக்குமே ஆசைப்படக் கூடாதுனு மனசுக்குள்ளே சொல்லிப்பேன். பிச்சை எடுக்கும்போது எல்லாரும் கேவலமா பார்ப்பாங்க. சிலர் அசிங்கமா திட்டி துரத்துவாங்க. அந்த நேரத்துல செத்துடலாம்னுகூட தோணும்'' என்று கண் கலங்கி சில நிமிடம் அமைதியானார்.

''திருப்பத்தூர்லதான் சொந்தக்காரங்க இருந்தாங்க. அவங்க முன்னாடி பிச்சை எடுக்கிறப்ப ரொம்ப கேவலமா பேசுவாங்க. அப்போதான் அங்கே பிச்சை எடுத்துட்டு இருந்த இவரைப் பார்த்தேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினார். நமக்கும் ஒரு துணை வேனுமில்லியா? கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னைக்கு வந்துட்டோம். இந்த இடத்துலதன் எங்க குடும்ப வாழ்க்கை ஆரம்பிச்சது. இனிமே யார்கிட்டயும் பிச்சை கேட்கக் கூடாது, எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு முடிவுப் பண்ணினோம். ஆனால், வேலைக் கேட்கப்போனா இடத்துல எல்லாம் நம்பாமல் விரட்டினாங்க. வேற வழியில்லாமல் மறுபடியும் பிச்சை எடுக்க ஆரம்பிச்சோம். யாராச்சும் கொடுக்கும் பழைய துணிகள்தான் எங்களுக்கு புது துணி. உடம்புக்கு முடியாமல் பகல் நேரத்துல நடைமேடையில் படுத்தாலும் பார்க்கிறவங்க திட்டி விரட்டுவாங்க. கடைகளில் மிஞ்சின சாப்பாட்டைக் கொடுப்பாங்க. எங்களுக்கும் எல்லார் மாதிரியும் வாழணும்னு ஆசை இருக்கு. ஆனா, அந்த ஆசை கனவாவே இருக்கு. அரசு சார்பா வீடு கட்டித் தர்றதா சொல்லி கணக்கு எடுத்துட்டுப் போனாங்க. ஆனா எதுவும் கிடைக்கலை. இப்போ வரை இந்த நடைமேடைதான் எங்க வீடு, எங்க சமையல் அறை. எங்க கக்கூஸ்'' என்று அழுகையுடன் சொன்னவர் பார்வை, குழந்தைகள் பக்கம் சென்றது.

லட்சுமி

''எங்களுக்கு ரெண்டுப் பெண் குழந்தைகளும் பிறந்துடுச்சு. நாமதான் இப்படி இருக்கோம். நம்ம குழந்தைங்களாச்சும் படிச்சு, உழைச்சு சம்பாதிக்கட்டும் முடிவுப் பண்ணினோம். இதோ, இப்போ லீவுக்கு வந்திருக்கும் இந்தப் பிள்ளைங்க ரெண்டு பேரும் திருப்பத்தூர் விடுதியில் தங்கி படிக்கிறாங்க. எங்களை கேவலமா பேசின சொந்தக்காரங்களின் பிள்ளைகள் படிக்கிற அதே ஸ்கூலுல படிக்கிறாங்க. பிச்சை எடுத்துதான் படிக்க வைக்கிறேன். எங்களை மாதிரி வாழ்க்கை இவங்களுக்கு இருக்காதுங்கிற நம்பிக்கையோடு இருக்கோம்'' என்றபடி துங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் தலையை கோதிவிடுகிறார் அந்தத் தாய்.

அந்தக் குழந்தைகளின் வாழ்வு நிச்சயம் சாலையில் கழியாது என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close