Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வசதியானவர்களைக் குறிவைக்கும் ‘அட்டென்ஷன் டைவர்ஷன் கேங்ஸ்டர்ஸ்’! - சென்னை போலீஸின் வாட்ஸ்அப் வலை

 ஈரான் நாட்டுக் கொள்ளைக் கும்பல்

சென்னையில், தனியாக நடந்துசெல்லும் வசதியானவர்களைக் குறிவைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. கவனத்தைத் திசைதிருப்பிக் கொள்ளையடிப்பதே, கொள்ளையர்களின் ஸ்டைல் என்பதால், ‘அட்டென்ஷன்... டைவர்ஷன்... கேங்ஸ்டர்ஸ்' என்று இந்த கும்பலுக்கு போலீஸார் பெயர் வைத்துள்ளனர். 

சென்னையில், கடந்த சில தினங்களாக மயிலாப்பூர், அண்ணாநகர், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. அனைத்து புகார்களிலும் கவனத்தைத் திசைதிருப்பிக் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது. இதனால், கொள்ளைச் சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்த தினங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, அனைத்து போலீஸ் உயரதிகாரிகளுடன் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கொள்ளைகுறித்து விவாதிக்கப்பட்டது. கொள்ளையர்களை உடனடியாகக் கைதுசெய்யவும் கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில், கொள்ளை நடந்த ஸ்டைலை வைத்து, ஈரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்ற முடிவுக்கு சென்னை போலீஸார் வந்துள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிய சென்னை போலீஸார், பொதுமக்களுக்கு ஒர் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டனர். அதில், நகை அணிந்து வெளியில் செல்லும்போது, கவனமாகச் செல்லவும். பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். இந்தச் சமயத்தில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கல்லூரியில் சேர 41 ஆயிரம் ரூபாயுடன் கிண்டிக்கு வந்துள்ளார். பணத்தை வங்கியில் செலுத்தி டி.டி. எடுக்கச் சென்றபோது, அவரின் கவனத்தைத் திசைதிருப்பிய கொள்ளையர், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பான புகாரில் கிண்டி போலீஸார், சம்பந்தப்பட்ட வங்கியில் சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்குறித்த விவரங்களைச் சேகரித்துவருகின்றனர்.

தொடர்கதையாகிவரும் கொள்ளைச் சம்பவத்துக்கு முடிவுக்கட்ட, சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். குறிப்பாக, ஈரான் நாட்டைச் சேர்ந்த பழைய கொள்ளையர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உஷார்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க 'அட்டென்ஷன்... டைவர்ஷன்... கேங்ஸ்டர்ஸ்' என்று ஆபரேஷனுக்கு பெயர் வைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "கடந்த 2013 ஆம் ஆண்டும், கவனத்தை திசைதிருப்பிக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சென்னயில் நடந்தன. அந்த வழக்கில், ஈரான் நாட்டுக் கொள்ளையர்களை சென்னை மாம்பலம் போலீஸார் கைதுசெய்தனர். இந்த கொள்ளைக் கும்பலின் தலைவன் ஆசிப் சபீர், மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதன்பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஈரான் நாட்டுக் கொள்ளைக் கும்பல், ஜாமீனில் வெளியில் வந்தனர். அவர்கள்தான் தற்போதும் சென்னையில் முகாமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இதனால், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காகத்தான் அந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளன. ஈரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள், வட மாநிலங்களில் தங்கியிருந்து, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வருவார்கள். பிறகு, சீருடையில்லாத போலீஸ் கெட்டப்பில் நகை அணிந்துசெல்பவர்களின் கவனத்தைத் திசை திருப்பி நகையை கொள்ளையடிப்பதே இந்த கொள்ளைக் கும்பலின் ஸ்டைல். இவர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். போலீஸ் என்று யார் சொன்னாலும் அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், ஈரான் கொள்ளையர்கள் ஒரே இடத்தில் தங்குவதும் கிடையாது. இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுவதால், கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொள்ளையர்கள் நகை, பணத்தைக்கொண்டு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவதுண்டு. விலை உயர்ந்த ஆடை, சொகுசு கார், நட்சத்திர ஹோட்டல் என இவர்களது வாழ்க்கை ஸ்டைல் இருப்பதால், பொது மக்கள் யாருக்கும் எளிதில் சந்தேகம் ஏற்படுவதில்லை. குறிப்பாக, நகை அணிந்து தனியாகச் செல்லும் மூதாட்டிகளே ஈரான் கொள்ளையர்களின் டார்கெட். அவர்களின் கவனத்தை எளிதில் திசை திருப்பி, நகைகளைக் கொள்ளையடித்துவிடுவர். கொள்ளையடித்த நகைகளை விற்கவும் ஏஜென்ட்டுகள் உள்ளனர். இந்தக் கொள்ளைக் கும்பல்குறித்த முக்கியத் தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதனால், விரைவில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement