வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (26/05/2017)

கடைசி தொடர்பு:16:13 (26/05/2017)

10 நாள் கெடுவிதித்த பெண்கள்... டாஸ்மாக்கை பாதுகாக்கும் போலீஸ்!

வட்டாச்சியர் சொன்னபடி இன்னும் பத்து நாளில் டாஸ்மாக் கடையை அகற்றவில்லையென்றால் நாங்களே அகற்றவேண்டிய சூழல் வந்துவிடும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விருப்பாட்சி கிராமப் பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ளது விருப்பாட்சி கிராமம். இங்கு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதை நிரந்தரமாக மூடக்கோரி அந்தக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டும், சாலைமறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி, "போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்னும் பத்து நாள்களில் இந்த டாஸ்மாக் கடைகளை முழுமையாக எடுத்து விடுகிறோம்" என்று உறுதி அளித்தார்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், "சொன்னபடி இன்னும் பத்து நாள்களில் டாஸ்மாக் கடையை எடுக்கவில்லை என்றால் நாங்களே எடுக்கவேண்டிய சூழல் வந்துவிடும்" என்று அரசுக்கு எச்சரிக்கை விடித்துவிட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குரு என்பவர் கூறுகையில், "இந்தக் கடையின் வழியாகத்தான் விருப்பாட்சி, சித்தாலிகுப்பம், ஆடூர் அகரம் என எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. மது அருந்திவிட்டு செல்லும் குடிகாரர்கள் இரவு நேரங்களில் தகாத வார்த்தைகளால் பேசி அவ்வழி செல்லும் பெண்களை கையைப்பிடித்து இழுக்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்படும் பெண்கள் பயந்துகிட்டு வீட்டிலும், வெளியிலும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இப்படியே இருந்தால் இப்பகுதியில் பெரிய கலவரமே ஏற்படும் சூழல் இருக்கிறது.

ஒரு கடை இருந்தாலே ஊரையே அழித்துவிடும். இங்கு இரண்டு கடைகள் இருக்கிறது. இதை அற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்துவிட்டோம். எந்தப் பலனும் இல்லை. அதனால்தான் நாங்களே போராட்டக் களத்தில் இறங்கிவிட்டோம். இந்த டாஸ்மாக் கடைகளை மூடும் வரை டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடுவோம். போராட்டம் செய்தால் எங்களை இந்த அரசாங்கம் போலீஸை ஏவி விட்டுத்தானே அடிக்கும். அடிக்கட்டும். அப்படியாவது இந்த கிராமங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்" என்றார்.