Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணியார்டரில் லஞ்சம்... விழுப்புரம் ஆட்சியரை அதிரவைத்த பெண்!

விழுப்புரத்தில் இறப்புச் சான்றிதழ் மற்றும் ஈமச் சடங்கு தொகையை வழங்க ஊராட்சி செயலர் லஞ்சம் கேட்டதை அடுத்து, லஞ்சப் பணத்தை மாவட்ட ஆட்சியருக்கு மணியார்டர் செய்திருக்கிறார் சுதா என்ற பெண்.

லஞ்சம்

இது குறித்து சுதா ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், 'எனது தந்தை கடந்த வருடம் இறந்துவிட்டார். அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்குத் தொகையை வழங்க எனது தாயிடமும் எனது கணவரிடமும் 3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார் கிராம உதவியாளர் பலராமன். ஆனால், அதை நாங்கள் தர மறுத்துவிட்டோம். 6 முறை வட்டாட்சியர் அலுவகலத்துக்குச் சென்றபோதும் எனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் எனக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இறப்புச் சான்றிதழை வழங்கினார்கள்.

மேலும், எனது தாய் உளுந்தூர்பேட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் என் தந்தையின் ஈமச்சடங்குத் தொகையைக் கேட்டு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கிராம உதவியாளர் பலராமன் மீண்டும் எங்களிடம் 500 ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். மேலும் கிராம உதவியாளர் பலராமன், “இந்தப் பணத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆர்.ஐ, வி.ஏ.ஓ, தனி வட்டாட்சியர் நிர்வாகம் என அனைவருக்கும் பங்கு தரவேண்டும். மேலும் நீ எங்கு சென்றாலும் இங்குதான் வர வேண்டும் என்றும் எங்களை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்றும் கூறினார்.

விழுப்புரம்

ஆட்சியருக்கு நான் தெரிவிக்க நினைப்பது, மக்களின் வீட்டில் வாழ்வோ சாவோ இவர்களுக்குத்தேவை மாதச் சம்பளமும், லஞ்சமும்தான். பெண்களின் கழுத்தில் தாலி ஏறினாலும், அவர்களின் கழுத்தில் தாலி இறங்கினாலும் இவர்களுக்கு லஞ்சப் பணம் தேவை. அதனால் இவர்களுக்கான லஞ்சப் பணம் 2 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு மணியார்டர் மூலம் அனுப்பியிருக்கிறேன் என்பதை இந்த மனு மூலம் தெரியப்படுத்துகிறேன். இந்தப் பணத்தை கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், உளூந்தூர்பேட்டை தனி வட்டாட்சியர் போன்றவர்களுக்கு உங்கள் கைகளாலேயே பிரித்துக் கொடுத்து அவர்களின் பதவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இருளர்

இதனிடையே நேற்று இருளர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி பேராசிரியர் பிரபா.கல்விமணி, வி.சி.க துரை.ரவிக்குமார், கோ.சுகுமாறன் போன்றவர்களுடன் இருளர் இன மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக எழும் லஞ்சப் புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் பேசுகையில், “சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நாளை அழைத்திருக்கிறேன். நானே நேரடியாக விசாரணை செய்து அந்தப் பெண் அளித்த புகார் உண்மையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல இருளர் இன மாணவர்களையும் அழைத்திருக்கிறேன். விசாரித்து உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும்” என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement