Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி கொடுத்த சாட்டை... எப்படி சுழற்றப்போகிறார் சுதாகர்! இது ரஜினி மன்ற பூகம்பம்

ரஜினி

ல வருடங்களுக்குப் பிறகு ரஜினி தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்ததுப் புகைப்படம் எடுத்து அனைவருக்கும் சந்தோஷ ‘ஷாக்’ கொடுத்தார். தமிழ்நாட்டில் ‘சிஸ்டம் சரியில்லை’ எனப் பற்ற வைத்தார் ‘பரட்டை’. பதிலுக்கு, ‘உண்மையில் ரஜினியைச் சுற்றி நடந்துவரும் சிஸ்டம்தான் சரியில்லை’ என்று சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த ‘சைதை ரவி’ சொல்லி சூடுகிளப்பி இருக்கிறார். எதற்காக இவர் இப்படி சொல்ல வேண்டும்?

கடந்த 15-ம் தேதி ஆரம்பித்த ரசிகர்கள் சந்திப்பு 19-ம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், அதன் பின் நடைபெற்ற ‘RBSI’ என்ற முகநூல் பக்கத்தின் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் ரஜினி. இங்குதான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குள் பெரும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. ‘ரசிகர் சந்திப்பின்’ போது ஒவ்வொரு ரசிகரும் ரஜினியைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஸ்கேனிங் ஐ.டி மூலமாகத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல தீவிர ரசிகர்கள் ரஜினியை சந்திக்க முடியாமல் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆனால், முகநூல் பக்கப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எவ்வித சிரமும் இல்லாமல் எப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ளமுடியும் என்று ‘சைதை ரவி’ கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி கேள்வி எழுப்பி ரசிகர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்திய காரணத்தால் சைதை ரவியை ரசிகர் மன்ற நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டனர். நடந்தது என்ன என்பதைப் பற்றிக் கூற சைதை ரவி நம்மை சந்தித்தார்.

“நான் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகன். ‘பாட்ஷா’ படம் பார்த்துதான் நானும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஒட்டிவருகிறேன். அந்த அளவுக்கு தலைவரை எனக்குப் பிடிக்கும். அதனால், சைதைப் பகுதியில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து ஒவ்வொரு படம் முதல் அவர் தொடர்பான எந்த விழா வந்தாலும் மிகப் பிரமாண்டமாய் கொண்டாடி வந்தேன். அதனால், சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக உயர்ந்தேன். சமீபத்தில் ரஜினி, தன்னுடைய ரசிகர்களை சந்திக்கப் போவதாக அறிவித்து கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பு விழாவும் நடத்தினார். அந்தச் சந்திப்பில் 16 மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். அந்த ரசிகர்களுக்கென்று ‘ஸ்கேனிங் ஐ.டி’ கொடுக்கப்பட்டுப் பல சோதனைகளுக்குப் பிறகே ரஜினியை சந்திக்க முடிந்தது. ஸ்கேனிங் ஐ.டி இல்லாத ரசிகர்கள் பௌன்சர் பாய்ஸ்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த ஐந்து நாட்களும் ரசிகர்கள் சந்திப்பு இப்படித்தான் நடந்தது. ஆனால், அதன்பிறகு முரட்டு பக்தர்கள் மற்றும் RBSI என்ற முகநூல் பக்க பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதைச் செய்தது எல்லாமே ரஜினியின் நண்பரான சுதாகர்தான். ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி பொறுப்பை சுதாகரிடம் ரஜினி ஒப்படைத்தார். அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ரஜினிக்குத் தெரியாமல் பல ஆதாயங்களை இவர் தேடிவருகிறார். இந்த சந்திப்புக்கும் சுதாகரும் அவருடைய மகனும்தான் ஏற்பாடு செய்திருந்தனர். 

சைதை ரவி

ரசிகர் மன்றத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியை சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், இணையதளத்தில்; இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரஜினியைச் சந்திக்க அனுமதி கொடுத்துள்ளீர்கள். இது என்ன நியாயம்? என்று கேட்டேன். இப்படி கேட்டதினால் ‘உன்னை நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து நீக்கிவிடுவேன்’ என்று சொன்னார்கள். "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இதைப்பற்றி நான் தலைவரிடம் சொல்லியே தீருவேன்" என்று சொல்ல. அதன்பிறகு என்னை உள்ளே விடாமல் மண்டபத்தின் வெளியே நிறுத்திவிட்டனர். அப்படி இருந்தும் ரஜினி காரில் வரும்போது ‘உங்களுக்கு தெரியாமல் உள்ளே என்னென்னவோ நடந்துக்கொண்டிருக்கிறது’ என்று கூச்சலிட்டேன். உள்ளே சென்ற தலைவர் இதைப் பற்றி விசாரித்திருக்கிறார். ஆனால், என்மீது வீண்பழி சுமத்தி மன்றத்தை விட்டு நீக்கிவிட்டனர்.

கவலையில்லை ரஜினி ரசிகனாக, நலம்விரும்பியாக இருப்பதற்கு மன்றம் ஒரு பொருட்டல்ல. ரஜினி நடிகராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சி தொடங்கி தலைவராக இருந்தாலும் சரி. என்றுமே அவரின் உண்மையான ரசிகனாக, தொண்டனாக இருப்பேன். இனி, என்னை ரஜினியே வந்து கூப்பிட்டாலும் நான் ரசிகர் மன்றத்தில் சேரப்போவதில்லை. ரஜினிக்குத் தெரியாமல் அவருடன் இருக்கும் பலர் அவரின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான ரசிகர்கள் என்றுமே ரஜினி நன்றாக இருந்தால்போதும் என்று நினைப்பவர்கள். இந்த உண்மை தலைவருக்குத் தெரிந்தால் போதும்” என்றார்.

இதைப்பற்றி சுதாகர் தரப்பில் கேட்டபோது, “இது சுத்தப் பொய். சைதை ரவி ரஜினியின் பெயரை சொல்லி பல வருடங்களாக ஆதாயம் தேடி வருகிறார். இதைப்பற்றி எத்தனையோ முறை அவருக்கு எச்சரிக்கை செய்திருக்கிறோம். ஆனால் அதைப்பற்றி அவர் காதில் வாங்கியதே இல்லை. ரசிகர்கள் சந்திப்பு நடக்கும்போது சைதை ரவி கோபத்துடன் சத்தம் போட்டார். அமைதியாக இருக்கும்படி எவ்வளவோ கூறினோம். ஆனால், அவர் சம்பந்தம் இல்லாமல் சண்டை போட்டார். ரசிகர் அனைவரும் அவர் மீது எரிச்சல் அடைந்தனர். அதனால், சைதை ரவியை ரசிகர் மன்ற நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அனைத்து நிர்வாகிகளும் ஒன்றாகக் கூடிப் பேசி சைதை ரவியை மன்றத்தை விட்டு நீக்கிவிட்டோம். இதை பற்றிய அறிவிப்பை விரைவில் வெளிவரும்.” என்றனர்.

போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார்... அவருடைய ரசிகர் மன்றத்திலேயே போர் உருவாகிவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement