கீழடியில் மூன்றாம் கட்ட ஆய்வுப் பணி துவக்கம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, பள்ளிச்சந்தை புத்தூர் என்ற இடத்தில், பண்டைய வணிக நகரத்தின் அடையாளத்தை தேடி 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று மத்திய தொல்லியலாளர் ஸ்ரீராமன் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ், வேதாசலம் ஆகியோரது முன்னிலையில் தொடங்கியது.

கீழடி அகழ்வாய்வு

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் பண்டைய வணிக நகரத்தின் அடையாளத்தை தேடி மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியை தொடங்கியது. 10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்தது. நவம்பர் வரை நடந்த அகழாய்வில் ஆயிரத்து 600 பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், 350 பானை ஓடுகள், 32 பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், 800 கண்ணாடி மணிகள், இரண்டு பெரிய சுவர்கள், மூன்று சங்க கால நாணயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. அதன்பின் 2016 ஜனவரி மாதம் 2 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. உலகிலேயே மூத்த இனம் தமிழனம் என உறுதிப்படுத்த கூடிய பல்வேறு சான்றுகள் கிடைத்தன .

இரண்டு கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச்  சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.. 3 ஆம் கட்ட அகழாய்வுக்கு 2017 ஜனவரி முதல் உரிமம் வழங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு மாற்றப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். ’இது தமிழன் வரலாற்றை மறைக்கும் செயல்’ என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 3 ஆம் கட்ட அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஏற்கெனவே அகழாய்வு நடந்த இடத்தை ஒட்டி 50 மீட்டர் தொலைவில் ராமதாஸ் என்பவரின் தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அதில் கிடைக்கும் ஆவணங்களை வைத்து அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை சார்பில் மூன்றாம் கட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கீழடி தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமனிடம் பேசும்போது, ‘தற்போது மூன்றாம் கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறோம். இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த ஆய்வுப் பணிக்கு நாற்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 400 சதுர மீட்டர் அளவுக்கு முதற்கட்டமாக 16 குழிகள் மார்க் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள பொருள்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று தெரிய வந்துள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் தேவையான வசதிகள் வழங்க உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருப்பதால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம். விவசாயம் செய்ததற்கான அடையாளம் இருக்கலாம் என்று நினைக்கிறோம்.அதே நேரத்தில், இங்கிருந்து எடுக்கப்படும் பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிவருகிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!