சென்னை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்.. அண்ணா பல்கலைக்கு 'நோ'!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என நான்கு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது. குறிப்பாக, அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் கடந்த ஓராண்டாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவும் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வந்தன.

Anbalagan


இதனால் பல்கலைக்கழகங்கள் பணிகள் முடங்கின. இதையடுத்து, துணைவேந்தர்களை நியமிப்பதில், தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்க நேற்று கவர்னர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் நேர்காணலை நடத்தினார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான அன்பழகன் உடன் இருந்தார்.
இந்நிலையில், சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  "சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லத்துரையும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேரையும், கவர்னர் நிராகரித்து விட்டார். மூன்று அல்லது நான்கு மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவார்.  துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படும், விரைவில், கல்லூரிகளில் பேராசியர் மற்றும் துணை பேராசியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்,

12 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது"  என்று கூறினார்.

இதில் துரைசாமி சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக இருந்தவர். செல்லதுரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றியவர்.  அண்ணா பல்கலைக்கழகத்துக்கான, கலந்தாய்வு நடந்து வரும் நேரத்தில் அதற்கு துணைவேந்தர் நியமிக்கப்படாததால், இந்த ஆண்டும் அங்கு துணைவேந்தர் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, பணி நியமன ஆணையைப் பெற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!