ஆடி அசைந்துவரும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆழித்தேர்! 

மன்னார்குடி மதில் அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, திருவாரூர் தேர் அழகு என்பார்கள். அதேபோல திருவாரூர் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகைக் காண, கண்கள் ஆயிரம் வேண்டும். சைவ சமய மரபில் பெரிய கோயிலாகவும் பஞ்சபூதத் தலங்களுள் பூமிக்குரியதாகவும் சமயக்குரவர்கள் நால்வரால் தொடங்கி, வாழையடி வாழையாக வந்த சைபத் திருக்கூட்ட மரபினர் அனைவராலும் போற்றிப் பாடல் பெற்ற தலமாக விளங்குவது, திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில்.

thiruvarur

இந்தக் கோயில், 16.22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று பிரகாரமும் 78 சன்னதிகளும் 9 கோபுரங்களும் 11 மண்டபங்களையும் 114 சிவலிங்கத் திருமேனிகளையும் 54 விநாயகர் திருமேனிகளையும் கொண்டுள்ளது. கோயிலின் தல விருட்சகமாக, சிவப்புப் பாதிரி மரம் அமைந்துள்ளது. தமிழகத் திருக்கோயில்களில் மிகத் தொன்மையானதும் தோன்றிய காலம் கூற முடியாத அளவு பெருமைபெற்றது என திருநாவுக்கரசரே வியந்து பாடும் சிறப்புப்பெற்றது, திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலும் அதோடு இணைந்த ஆழித்தேரும்.

தமிழகத்தில் உள்ள தேர்களில், திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இந்தத் திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இதர திருக்கோயில்களின் தேர்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.31 அடி உயரம் கொண்ட இந்தத் தேர், கட்டுமானத்தில் இரண்டு இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டமும் ஒன்றரை அடி அகலமும் உடைய நான்கு இரும்புச் சக்கரங்களின் மேல், வர்ணிக்க இயலாத கலைப் பொக்கிஷமான சிற்பங்களுடன் தேர் அமைந்துள்ளது.

எண்கோண வடிவமாக அமைந்துள்ள இந்தத் தேர், குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட இந்தத்தேரின் உயரம் 96 அடி. அலங்கரிக்கப்படும் போது இதன் எடை 350 டன். தேரின் முன்புறம், தேரை இழுத்துச் செல்வதுபோல பாயும் அமைப்பில் உள்ள நான்கு பிரம்மாண்டமான 32 அடி நீளம், 11 அடி உயரம் உடைய குதிரைகள், தமிழர்களின் கலை நயத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதிநாயனார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் புராணச் சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராணக் காட்சிகள், மரத்தில் புடைப்புச் சிற்பங்களாகத் தேரின் 3 நிலைகளைக்கொண்ட அடிப் பாகத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது, தேரின் பேரழகு.

Thiruvarur

முன்பிருந்த ஆழித்தேர், 1970 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு,  2011ல் தேர் செப்பணிடும் பணி தொடங்கி நான்கு ஆண்டுகளில் நிறைவுபெற்று, பழைமை மாறாமல் சுமார் 9 ஆயிரம் கனஅடி மரங்கள் பயன்படுத்தப்பட்டு, ரூ.2.17 கோடியில் செப்பணிடப்பட்டது. இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, இன்று (29-05-17 ) காலை 7.20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தேரோட்டத்தைக் காணவும் வடம்பிடிக்கவும் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருவாரூருக்கு வந்து ஆரூரா...தியாகேசா.. என பக்த கோஷங்களோடு ஆழித் தேரோட்ட வடம்பிடித்து இழுத்து மகிழ்கின்றனர்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!