Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''படிச்சது கைவிட்டிருச்சு... பிடிச்சது காப்பாத்திருச்சு!" - 'அபூர்வ ராகங்கள்' ஸ்வேதா

டான்ஸர் ஸ்வேதா

"குழந்தைப் பருவத்துல விளையாட்டா தொடங்கின என்னோட டான்ஸ் பயணம் பல கட்டங்களைக் கடந்து இப்போ என்னோட உயிர் மூச்சு மாதிரி ஒன்றிப்போயிடுச்சு. ஆக்ஸிடென்ட், படிப்பு, வேலைனு அடுத்தடுத்த வட்டத்துக்குள்ள சிக்கியிருந்த சமயத்துல மீடியாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்திருந்தேன். அந்த பிரேக் தான், என் மேல உண்மையான அன்பு வெச்சிருந்த உள்ளங்களை எனக்கு அடையாளப்படுத்துச்சு" என்னும் நடிகை ஸ்வேதா, தற்போது டான்ஸ், ஆக்டிங், ஆங்கரிங் என கலக்கிக்கொண்டிருக்கிறார்.

"பிளஸ் ஒன் படிக்கிறப்போ விஜய் டிவியின் 'உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சி மூலமா சாதாரண ஒரு டான்ஸராதான் என்னோட மீடியா பயணத்தைத் தொடங்கினேன். தொடர்ந்து 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில டைட்டில் வின்னரானதோடு, சில படங்கள்லயும், சீரியல்கள்லயும் நடிக்கவும் செய்தேன். அப்போ விஜய் டிவி 'ஜோடி' நிகழ்ச்சியில போட்டியாளரா டான்ஸ் ஆடிகிட்டு இருந்த சமயம். ஒரு நிகழ்ச்சிக்குப் போயிட்டு திருச்சி - சென்னை நோக்கி வந்துக்கிட்டு இருந்தப்போ பயணம் செஞ்ச பஸ் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அப்போ என்னோட கால்ல ஏற்பட்ட காயம் குணமாகப் பல மாசம் ஆச்சு. அந்த சமயத்துல நடக்க, டான்ஸ் ஆட முடியாத நிலையிலயும்கூட வீல் சேர்ல வந்து 'ஜோடி' நிகழ்ச்சியில டான்ஸ் ஆடினேன். 'இவ என்ன இப்படி டான்ஸ் பைத்தியமா இருக்காளே'ன்னு நிறையப் பேரு என்னைப் பாராட்டியும், திட்டியும் உற்சாகப்படுத்தினாங்க.

டான்ஸர் ஸ்வேதா

ஃபிரான்ஸ் நாட்டுக்குப் போய் எம்.எஸ்ஸி படிச்சுட்டு அங்கேயே கொஞ்ச காலம் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். சில காரணங்களுக்காக சென்னைக்கு வந்து வேலை செய்ய முடிவெடுத்தேன். சென்னையிலயும், பாண்டிச்சேரியிலயும் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்ல இன்டர்வியூக்குப் போனேன். எந்த இடத்துலயும் நான் மீடியாவுல டான்ஸ் ஆடினது, நடிச்சதுனு எந்த விஷயத்தையும் சொல்லவேயில்லை. ஆனாலும் எல்லா ரவுண்டுலயும் செலக்ட் ஆகி, கடைசியா ஹெச்.ஆர்கிட்ட போறப்போதான் பிரச்னையே வரும். 'நீங்க நிறைய சேனல் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல நல்லாவே பெர்ஃபார்ம் பண்ணியிருக்கீங்க. ஒருவேளை வேலைக்குச் சேர்ந்த பிறகு, நடுவுலயே மறுபடியும் மீடியா பக்கம் போயிடுவீங்க'ன்னு அவங்களே முடிவு  பண்ணி என்னை செலெக்ட் செய்யாம இருந்தாங்க. அந்த காலகட்டம் எனக்கு ரொம்பவே வருத்தமாவும் சோதனையாவும் இருந்துச்சு. ஒருகட்டத்துல 'இதுவரைக்கும் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைக்கு ட்ரைப் பண்ணினது போதும். இனிமேல் டான்ஸ்தான் நம்மோட உலகம்'னு முடிவுவெடுத்தேன். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில ஜெயிச்சதுனால கிடைச்ச பாண்டிச்சேரி வீட்டுல தங்கி, அங்கேயே டான்ஸ் கிளாஸ் எடுத்துகிட்டு இருந்தேன்" என்பவர் மீடியாவில் ரீ-என்ரி கொடுத்த அனுபவத்தைப் பகிர்கிறார்.

டான்ஸர் ஸ்வேதா

"மறுபடியும் மீடியாவுக்கு வரணும்னு நிறையவே ஆசை இருந்தாலும், அதுக்கான சரியான வாய்ப்பு அமையாமலேயே இருந்துச்சு. இருந்தாலும் என்னோட டான்ஸ் கிளாஸை நடத்திகிட்டு, ஜூம்பா ஃபிட்னஸ் டான்ஸ் கிளாஸூம் எடுத்துகிட்டு இருந்தேன். இந்நிலையில கடந்த ஜனவரி மாசம்தான், 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில போட்டியாளரா டான்ஸ் ஆட 'ஜீ தமிழ்' சேனல்ல இருந்து அழைப்பு வந்துச்சு. 'கிட்டத்தட்ட நாலு வருஷம் கழிச்சு மறுபடியும் மீடியாவுல ரீ-என்ட்ரி கொடுக்கப்போறோம். அதுவும் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையும் அமையாததால, கிடைச்ச வாய்ப்பை ரொம்பவே நல்லா பயன்படுத்திக்கணும். டைட்டிலின் வின்னராகணும்'னு மனசுல பயங்கரமான ஆசையும் வெறியும் இருந்துச்சு. அதுக்காகச் சென்னைக்கு ஷிஃப்ட் ஆனதோடு, நிறையவே பயிற்சி எடுத்தேன்.

ஆக்ஸிடென்ட்னால இப்பவும் ஹெவியா டான்ஸ் ஆடுறப்போ கால்ல வலி வரும். அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம நானும் என்னோட சக போட்டியாளரும் டான்ஸ் ஆடினோம். எல்லோருமே எங்களை நல்லாவே உற்சாகப்படுத்தினாங்க. ஆரம்பத்துல இருந்தே நாங்க நல்லா பாராட்டு வாங்கி, அடுத்தடுத்த ரவுண்டுக்குப் போனோம். எப்படின்னு தெரியல. எங்களால ஃபைனலுக்குப் போக முடியல. இவ்வளவு கஷ்டப்பட்டும் ஃபைனலுக்குப் போக முடியலையேன்னு பயங்கர ஃபீலிங். ஃபைனல் ஸ்டேஜ்ல என்னால டான்ஸ் ஆட முடியாட்டியும், அந்த சீசனோட பெஸ்ட் விமன் டான்ஸர் அவார்டு வாங்குனப்போ எல்லா ஆடியன்ஸூம் சத்தம்போட்டு எனக்குக் கொடுத்த உற்சாகத்துல எல்லா கவலையும் மறந்துபோயிடுச்சு" என்பவர் தற்போது சீரியலில் நடிப்பதோடு, புதிதாக ஆங்கர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

டான்ஸர் ஸ்வேதா

"டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய படங்கள், சிரியல்ல ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்து, சில காரணங்களால தடைபட்டுப்போயிட்டும் இருக்குது. இதற்கிடையே சன் டிவி 'அபூர்வ ராகங்கள்' சீரியல்ல கமிட் ஆகி, லீட் ரோல்ல நடிச்சுகிட்டு இருக்கேன். கடந்த மே 1ஆம் தேதி ஜெயா டிவியில தல 57'னு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ஹிட் ஆனதால, இப்போ மறுபடியும் அதே சேனல்ல 'மியூசிக் கஃபே'னு ஒரு நிகழ்ச்சியை ரெகுலரா தொகுத்து வழங்க இருக்கேன். தல அஜித் பத்தின அந்த நிகழ்ச்சிதான் இப்போ எனக்கு பெரிய பிரேக் கொடுத்திருக்குது. அடுத்தடுத்து ஆக்டிங், ஆங்கரிங், டான்ஸ்னு நிறைய வாய்ப்புகள் வந்துகிட்டு இருக்குது. கூடவே வெளி நிகழ்ச்சிகள்ல தொடர்ந்து டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கிறதோடு, டான்ஸ் கிளாஸூம் எடுத்துகிட்டு இருக்கேன்" என்கிறார் புன்னகையுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement