'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி | Party officials meet TTV Dinakaran in prison

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (29/05/2017)

கடைசி தொடர்பு:20:33 (29/05/2017)

'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி

டி.டி.வி.தினகரன்

 

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துவருகின்றனர். அப்போது, மெலிந்து காணப்பட்ட டி.டி.வி. தினகரனிடம், 'அண்ணனை இப்படியா நாங்க பார்க்கணும்' என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். 

 இரட்டை இலை சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க, டெல்லி ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்ததாக போலீஸார் டி.டி.வி.தினகரனை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், சிறைக்குச் சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். 
 சமீபத்தில், டெல்லிக்குச் சென்ற டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், அவரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மெலிந்திருப்பதைக் கண்ட அவர்கள், 'அண்ணனை இப்படியா நாம பார்க்கணும்' என்று சொல்ல, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரைச் சந்தித்தவர்களின் கண்களில் நீர் கசிந்தன. அதைச் சமாளித்த டி.டி.வி.தினகரன், 'நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீர்களா' என்று விசாரித்துள்ளார். அதற்கு அவர்களும் 'ஆமாம்'  என்று தலையசைத்துள்ளனர். அடுத்து அவர்களது பேச்சு, அரசியலுக்குத் தாவியது. 


 இதுகுறித்து டி.டி.வி. தினகரனைச் சந்தித்தவர்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரன், யாரையும் சந்திக்க விரும்பவில்லை'' என்ற தகவலால் நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மன்னார்குடியின் முக்கிய விவிஐபி ஒருவர், டி.டி.வி.தினகரனைச் சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் இருவரும், மனம்விட்டு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அ.தி.மு.க-வில் மன்னார்குடி குடும்பம் சார்பில் திவாகரனை பவர் சென்டராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரம்கட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சில அமைச்சர்கள் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளனர். கட்சிக்கு துரோகம்செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் ஒன்றிணையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 
 டி.டி.வி.தினகரனைச் சந்திக்க நாங்கள் தூதுவிட்டிருந்தோம். அதற்கு  டெல்லியிலிருந்து அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் சென்று அவரை சிறையில் சந்தித்தோம். அப்போது, அவர் மெலிந்து காணப்பட்டார். முகத்திலும் ஒருவித சோகம் தெரிந்தது. ஆனால், அதை எல்லாம் எங்களிடம் காட்டிக்கொள்ளாமல், எங்களது உடல்நலத்தை விசாரித்தார். அதன்பிறகு, தமிழகத்தில் நடக்கும் அரசியல்குறித்து கேட்டறிந்தார். சில உண்மைகளை அவரிடம் எடுத்துச்சொன்னோம். அதை அமைதியாகக் கேட்ட அவர், ''பொறுத்திருங்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் கண்காணியுங்கள். நமக்கு எதிராகச் செயல்படுவோருக்கு நாம் யார் என்று காட்டுவோம். சிறையிலிருந்து பீனிக்ஸ் பறவை போல விரைவில் வெளியில் வருவேன். அப்போது, இந்த டி.டி.வி. யார் என்று அவர்களுக்குத் தெரியும். அதுவரை, உங்களை வழிநடத்த ஒருவரை நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். அவரின் தலைமையில் ஒற்றுமையாகச் செயல்படுங்கள் என்று தெரிவித்தார்" என்றனர். 

"டி.டி.வி.தினகரன்

 சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனைச் சந்திக்க வருபவர்கள்குறித்த தகவலை அவருக்குத் தெரிவிப்போம். அவர் விருப்பப்பட்டால், அவர்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். அதன்படி மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வந்து அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். அவரது ஆதரவாளர்களும் வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு சிறையில் விதிமுறைப்படி வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவருடன் இரண்டு விசாரணைக் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தமிழ் தெரியும். அவர்களுடன் சகஜமாக டி.டி.வி.தினகரன் பேசுகிறார். ஆனால், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எதையும் அவர்களிடம் அவர் பேசுவதில்லை. மேலும், அவரது உடல் எடை குறைந்துள்ளது. 


வாக்கிங் செல்கிறார், விரும்பிய உணவுகளைக் கேட்டு சாப்பிடுகிறார். அதோடு, எங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்துவருகிறார். ஆங்கில, தமிழ் செய்தித்தாள்களில் தமிழக அரசியல் நிலைகுறித்து ஆர்வமாக தினமும் காலையில் படிப்பார். அவரைப் பற்றி வரும் செய்திகளை அவருடன் தங்கியிருக்கும் விசாரணைக் கைதிகளுடன் சொல்லி கமென்ட்ஸ் அடிப்பதையும் வழக்கமாக்கியுள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருந்தாலும் அவரது மனதுக்குள் வருத்தம் இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டாமல், அவரைச் சந்திக்க வருபவர்களிடம் இயல்பாகப் பேசுகிறார். நெருங்கிய நபர்கள் வரும்போது மட்டும் மனம்விட்டுப் பேசுகிறார்"என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்