Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அப்பாவிகளைப் பலிவாங்கும் பைக் ரேஸ்!’ - கடிவாளம் போடுமா காவல்துறை?!

Bike race

சென்னையில் பைக் ரேஸ் நடத்தத் தடையிருந்தாலும், அதையும் மீறி வாரவிடுமுறை நாள்களில் பைக் ரேஸ் நடத்தப்பட்டுவருகிறது. மெரினாவில் நடந்த பைக் ரேஸில் சிக்கி, பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், மூதாட்டி ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

சென்னை மெரினாவில், வார விடுமுறை நாள்களில் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதுண்டு. மெரினா உள்வட்டச் சாலையில்,  சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு போலீஸ் தடை விதித்திருந்தாலும், அதை பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் பட்டாளம் கண்டுக்கொள்வதில்லை. குறிப்பாக, பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், போலீஸில் சிக்கினாலும் உயரதிகாரிகளின் சிபாரிசு காரணமாக உடனே வெளியில் வந்துவிடுவார்கள். இதன் காரணமாக, பைக் ரேஸை சென்னையில் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.சாலையில் சில இளைஞர்கள் இன்று காலை பைக்கில் பறந்தனர். போட்டி போட்டுக்கொண்டு சாலையில் பறந்த பைக்குகளால் பொதுமக்கள் அஞ்சினர். பைக்குகள் தாறுமாறாக சாலையில் பறந்தன. அப்போது, ஆர்.கே. சாலையில் நடந்துசென்ற இரண்டு பெண்கள் மீது பைக் மோதியது. அதில், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள், காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்தார். இன்னொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களையும் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் பைக் மோதி பலியான பெண், மீனா என்றும் காயமடைந்தவர் யசோதா என்ற மூதாட்டி என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தை ஏற்படுத்தியதாக, முகமது இஸ்மாயில் மற்றும் பிரபு ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பலியான பெண்

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியிலிருந்து மெரினா கடற்கரை வரை பைக் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரேஸில் பங்கேற்ற பைக்குகள் அனைத்தும் விலை உயர்ந்தவை. அவர்கள், சாலையில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். காலை நேரம் என்பதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. சென்னை ஆர்.கே.சாலையில் முகமது இஸ்மாயில், பிரபு ஆகியோர் சென்ற பைக்குகள் மோதியதில் மீனா, யசோதா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் மீனா பலியாகிவிட்டார். யசோதாவுக்கு 60 வயதிருக்கும். அவருக்கு கை, கால் உடைந்துள்ளதால், சிசிக்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களைப் பொதுமக்கள் பிடித்து எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் முகமது இஸ்மாயில், பிரபு ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

சென்னையில் பைக், கார் ரேஸ்கள் நடப்பது தொடர்கதையாகிவருகின்றன. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை. அதுதொடர்பாக வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தினர். கார் ரேஸில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தொழிலதிபர்களின் மகன்கள் என்பதால், எளிதில் வெளியில் வந்துவிட்டனர். அதுபோலத்தான் இன்றும் பைக் ரேஸில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். வேகமாக வந்த பைக் மோதி, மீனா என்பவர் பலியாகியுள்ளார். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குகின்றனர். பைக், கார் ரேஸ்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால்மட்டுமே அப்பாவிகள் உயிர் இழப்பதைத் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர் பொதுமக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement