வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (29/05/2017)

கடைசி தொடர்பு:15:55 (29/05/2017)

டி.டி.வி.தினகரன் காவல் நீட்டிப்பு!

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனுக்கு, ஜூன் 12 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரு அணிகளாக அ.தி.மு.க உடைந்ததால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் கேட்டு இருஅணியினரும் தேர்தல் ஆணையத்தில் போட்டிபோட்டனர். இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர் நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்ட நான்கு பேரை டெல்லி போலீஸ் கைதுசெய்து, திகார் சிறையில் அடைத்தது.


இந்நிலையில், தினகரனுக்கு ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 

மேலும், சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கோரிய டிடிவி தினகரன் மனு மீதான விசாரணையில் வருகிற மே 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.