Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பூர்வீகச் சொத்தை இழந்தாலும், உழைப்பை மறக்கலை!'' - ரோட்டோர பலகாரக்கடை காஞ்சனா

காஞ்சனா

னது அத்தனை பூர்வீகச் சொத்துகளையும் இழந்து சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? பங்களா, கார் என பெருவாழ்வு வாழ்ந்து, கடன் தொல்லையால் அத்தனையும் இழந்து, கையில் பிள்ளைகளையும் நெஞ்சில் வைராக்கியத்தையும் ஏற்றுக்கொண்டவர். கடந்த பதினேழு வருடங்களாக தள்ளுவண்டி கடையில் வடை, போண்டா விற்பனை செய்து வருகிறார். அவர்தான் காஞ்சனா கண்ணப்பன்.

சென்னை, திருவான்மியூர் குமரகுரு தெருவைச் சேர்ந்தவர். 'செட்டியாரம்மா கடை' என்றால், அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்.

''என் அம்மா ஊர் திருத்தணி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான். எனக்கு கூடப் பொறந்தவங்க ஐந்து பேர். மத்தவங்களவிட எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. திருமணமாகி வரும்போது எனக்கு 13 வயசு. விளையாட்டுப் பிள்ளையா இருந்தேன். குடும்பம், உறவுகள் பத்தி தெரிஞ்சிருந்தாலும் அனுசரிச்சு நடக்குறது, சில பழக்கவழக்கங்கள் தெரியாம இருந்துச்சு. நல்லவேளையா என் மாமனாரும் மாமியாரும் பெரியளவில் சப்போர்ட்டா இருந்தாங்க. கார், பங்களா, நகைனு ரொம்ப வசதியா வாழ்ந்தோம். ஆடம்பர வாழ்க்கைக்குத் தகுந்த மாதிரி கடனும் சேர்ந்துடுச்சு. வீட்டின் மேலே லோன் வாங்கியிருந்தோம். கூட்டுக் குடும்பமா இருந்து கடன் வாங்கினோம். சரியா கட்ட முடியல. அதனால், வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். வாடகை வீட்டில் வந்த எங்களால நைட்டு நிம்மதியா தூங்க முடியல. எல்லார் முகத்திலும் சோகம். என் பிள்ளைகளுக்கு 'எல்லாம் ஒருநாள் சரியாகும்'னு சமாதானம் சொன்னேன். சில நாள்கள் வீட்டில் உட்காந்து யோசிச்சேன். 'ஏன் இப்படி வீட்லேயே உட்கார்ந்திருக்கணும். ஏதாவது ஒரு வேலைப் பார்ப்போம்னு தோணுச்சு. எனக்குச் சமையலைத் தவிர வேற எதுவும் தெரியாது. என் கணவர்கிட்ட சொன்னதும், 'தெரிஞ்ச வேலையை நல்லபடியா பண்ணுவோம்'னு சொன்னார். அடுத்த நாள் ரோட்டோர தள்ளுவண்டி கடையை ஆரம்பிச்சோம். படிப்படியா பலகாரம் போட ஆரம்பிச்சோம்'' என்ற காஞ்சனா கண்ணப்பன், சில நொடிகள் அமைதியாகித் தொடர்கிறார். 

காஞ்சனா குடும்பத்தினருடன்

''என்னோட கைப்பக்குவம் நிறையப் பேருக்குப் பிடிச்சிருந்துச்சு. அக்கம்பக்கத்துல இருக்கிற பலரும் முன்கூட்டியே ஆர்டர் சொல்ல ஆரம்பிச்சாங்க. இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துச்சு. என் கணவர் கண்ணப்பன் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சார். இரண்டு பேரும் இரவுப் பகலா உழைச்சோம். உழைப்பின் பயனும் கிடைச்சுது. எங்க ரெண்டு பொண்ணுங்களான கவிதா, கெளசல்யாவைப் படிக்கவெச்சு நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்தோம். பையன் தினேஷை சிவில் இன்ஜினீயரிங்குக்குப் படிக்கவெச்சோம். அவர் படிப்பை முடிச்ச கையோடு தனியார் கம்பெனியில வேலைப் பார்த்துட்டிருக்கார். நாங்க இழந்த சொந்த வீடு இப்போ பல கோடிக்கு போகும். அதை இழந்ததை நினைச்சா இப்பவும் வலியா இருக்கும். ஆனால், போனதையே நினைச்சு கவலைப்படாமல் இருக்கிறத வெச்சு சந்தோஷமா வாழணும்னு ஒவ்வொரு முறையும் என்னை தேத்திப்பேன். என் மனசுல இப்பவும் ஒரு வைராக்கியம் இருக்கு. நிச்சயமா ஒருநாள் சொந்த வீடுகட்டுவேன். என்னோட பெரிய கனவுகளில் ஒண்ணு, ஹோட்டல் ஆரம்பிக்கிறது. இத்தனை வருஷ உழைப்பினால் கூடிய சீக்கிரமே அந்தக் கனவும் நிறைவேறப்போகுது. இந்தக் கடையைப் போட்ட ஆரம்பத்தில் எல்லாருக்கும் இருக்கிற மாதிரி போலீஸ் பிரச்னை எங்களுக்கும் இருந்துச்சு. அவங்கக்கிட்டே எங்க நிலைமையைத் தெளிவா எடுத்துச் சொன்னோம். அவங்களும் புரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் எங்களைத் தொந்தரவு பண்றதே இல்ல'' என்றபடி தொடர்ந்தார். 

''நான் சாயந்திரம் போடும் கடைக்குத் தேவையான வெங்காயம் வெட்டறது, மாவு ஆட்றதுனு நிறைய விஷயங்களுக்கு என் கணவர் உதவிகரமா இருக்கார். பொருள்களைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கிறது வரை எல்லா வேலைகளையும் செஞ்சுட்டுத்தான் ஆட்டோ ஓட்டவே போவார். பருப்பு வடை, போண்டாவுக்குத் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புதினா போன்றவற்றை கச்சிதமாகப் போடுவோம். அதுல கஞ்சத்தனம் பண்றது இல்லை. இப்போவரைக்கும் நான் ஒருமுறை உப்புப் போட்டா அதோட சரி. பிறகு டேஸ்ட் பார்க்கவே மாட்டேன். அவ்வளவு கச்சிதமா இருக்கும். சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு ஒன்பது மணி வரைக்கும் ஓயாமல் பலகாரம் செய்துட்டு இருப்பேன். மனசுல இருக்கிற கவலையெல்லாம் கடைக்கு வந்து ஆர்வத்தோடு ரசித்துச் சாப்பிடும் ஜனங்களைப் பார்த்ததும் பறந்து போயிடும்'' என்கிறார் புன்னகையுடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement