வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (29/05/2017)

கடைசி தொடர்பு:08:04 (30/05/2017)

முற்றும் நெருக்கடி... எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். பிறகு, முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணிகளாக உடைந்தது அ.தி.மு.க. சில எம்.எல்.ஏ-க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்.எல்.ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி எனக் காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் 'இரட்டை இலை' சின்னமும் முடக்கப்பட்டது. 

Edapadi Palanisamy


இதைத் தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் சிறைக்குச் செல்ல, இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, இரு அணிகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதற்கிடையே, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணியினர் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இரண்டு அணியினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் ரகசியக் கூட்டம்  நடந்தது. இதனால், அ.தி.மு.க அம்மா அணி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ-க்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகின.


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த வாரம் எம்.எல்.ஏ-க்களை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தற்போதுள்ள அரசியல் சூழல், இரு அணிகள் இணைவது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.