வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (30/05/2017)

கடைசி தொடர்பு:13:36 (30/05/2017)

“குண்டர் சட்ட கைது... கோழைத்தனமானது!” - திருமுருகன் உள்ளிட்ட மூவருக்குப் பெருகும் ஆதரவு

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்


மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்ததற்கு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முதல் எதிர்க்கட்சியான திமுகவரை, பல தரப்புகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் பாய்ந்துவந்துள்ளன.

 

கடந்த 21ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில், இலங்கை இனப்படுகொலைக்கு நீதிகேட்டு மெழுகுவர்த்தி அஞ்சலிக்கு எட்டாவது ஆண்டாக அழைப்பு விடுத்திருந்தது, மே பதினேழு இயக்கம். அதற்காக வந்தவர்களை மட்டுமல்லாமல், காற்றுவாங்க வந்தவர்களையும்கூட கைதுசெய்ய முயன்றனர், பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்! போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 17 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவரவர் அமைப்புகள் பிணையில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி காலையில், புழல் சிறைக்குச் சென்ற போலீசார், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஊடகங்களில் இத்தகவல் வெளியானபோதும், குண்டர் சட்ட நடவடிக்கைக்கான காரணம் போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. அதிகாரபூர்வமற்ற வகையில், மத்திய அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால்தான் இந்த நடவடிக்கை என போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியிடப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, இந்த தகவல் தொலைக்காட்சிகளில் வெளியானதும் தமிழ்த்தேசிய அமைப்புகள், இயக்கங்கள், சிவில் உரிமை அமைப்புகள், தன்னார்வலர் அமைப்புகள், தனியான செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எழுத்தாளர்கள், கருத்தாளர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசின் நடவடிக்கை குறித்து காரசாரமான விமர்சனங்களை வெளிப்படுத்தினர். 

எப்போதும் ஆதரவளிக்கும் தரப்புகள் மட்டுமின்றி, கொள்கை மாறுபாடுகளைக் கடந்து, மார்க்சிஸ்ட் கட்சி, திமுக போன்ற தரப்புகளிலிருந்தும் திருமுருகன் உட்பட்ட நால்வர் மீதான நடவடிக்கைக்கு கண்டனங்கள் வெளிப்பட்டன. விசிக, நாம் தமிழர், மதிமுகவைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டனம், அசாதாரணமானது. 

சமூக ஊடகங்களைத் தொடர்ந்து, 29ஆம் தேதி இரவு அன்றாடத் தொலைக்காட்சி விவாதங்களில் இந்த விவகாரமே முக்கிய இடம் பிடித்தது. 

போலீஸ் தரப்பில் முறைப்படியான விளக்கக் குறிப்பு அளிக்கப்படாதநிலையில், இது பற்றிய சட்டரீதியான கருத்துகளைக் கூறுவது கடினம் என்றாலும், குடிமை-சிவில் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவோர் மீது குண்டர் சட்டத்தை ஏவலாமா என்பது கண்டனம் தெரிவிப்பவர்களின் கேள்வி!

இப்படி குடிமை உரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தினர் மீது குண்டர் சட்ட வழக்கு இதுதான் முதல் முறையா என்றால், இல்லை. இதற்கு முன்பு, கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கூடங்குளம் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அதை உடைத்து விடுதலை ஆனார்கள். 

“இதைப் போலவே நாமக்கல் மாவட்டத்தில் மதியழகன் எனும் சமூகச் செயற்பாட்டாளர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது; மாவட்டத்தில் பல்வேறு மக்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவரும் இவர் மீது பொய் வழக்கு பதியப்பட்டு, அதன்படி குண்டர் சட்டம் ஏவப்பட்டது. முறையீட்டுக் குழுவில் வழக்கு நிற்கவில்லை. அவர் விடுதலை ஆனார். இதேபோல கல்லூரிப் பிரச்னை ஒன்றுக்காக மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நாகராஜன் மீதும் இதே அடக்குமுறை ஏவப்பட்டது; அதுவும் முறியடிக்கப்பட்டது. மக்கள்விரோதக் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே இதைப் போன்ற நடவடிக்கைகள் ஏவப்படுகின்றன” என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன். 

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருள்முருகனிடம் கேட்டபோது, “இந்திய ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து, பதினேழு இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து கருத்துப்பரப்பல் செய்துவருகிறோம். உலக வர்த்தகக் கழகத்தின் வர்த்தக வசதி ஒப்பந்ததில் 78 ஆவது நாடாக இந்தியா கையெழுத்திட்டபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். ரேசன் கடைகளை ஒழிக்கப்போகிறது என அப்போதே எச்சரிக்கை விடுத்தோம். இன்று அது நடக்கிறது. ஹைட்ரோகார்பன் சிக்கல், ஜல்லிக்கட்டு ஆகியவற்றிலும் மத்திய அரசின் நிலைப்பாடு தவறானது என்பதை மக்களிடம் விளக்கினோம். இலங்கை இனப்படுகொலைக்கான நீதி கேட்டு இதுவரை நாங்கள் நடத்திய எந்த ஒரு போராட்டத்திலும் வன்முறை நடந்ததில்லை. எல்லாமே ஜனநாயகப் போராட்டங்கள்தான். இதுவரை மெரினா கடற்கரையில் இனப்படுகொலைக்கான அஞ்சலிக்கு அனுமதி பெறாமல்தான் ஏழு ஆண்டுகளும் நடத்தியிருக்கிறோம். அமைதிவழியாகக் கூடி அஞ்சலி செலுத்திவிட்டு, கலைந்துவிடுவோம். எங்களின் கருத்துப்பரப்பலை ஜனநாயகரீதியாக எதிர்கொள்ள ஒன்றிய அரசால் முடியவில்லை. அதே கொள்கையைப் பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு, கோழைத்தனமாக குண்டர் சட்டத்தை ஏவி, மே பதினேழு இயக்கத்தை முடக்கப்பார்க்கிறது. பல்வேறு அரசியல் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், செயற்பாட்டாளர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களின் ஆதரவுடன் இந்த பொய் வழக்கை முறியடிப்போம்” என்றார் அருள்முருகன், அழுத்தமாக.


டிரெண்டிங் @ விகடன்