Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுமுறை நாளின் மிதிவண்டி பயணத்தில் பசுமையை விதைத்த குழந்தைகள்!

குழந்தைகள்

கோடை விடுமுறையில் உங்கள் வீட்டுக் குழந்தைகள் என்னவெல்லாம் செய்தார்கள்? வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்குப் போயிருப்பார்கள். வீட்டின் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல்களில் மூழ்கி இருப்பார்கள். நீச்சல் பயிற்சி போன்ற ஸ்பெஷல் கோச்சிங் சென்றிருப்பார்கள். ஆனால், ஊத்துக்குளியைச் சேர்ந்த சில சிறுவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஊத்துக்குளி அருகே கதித்தமலை என்ற இடத்தில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. இதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது, குக்கூ குழந்தைகள் நூலகம் மற்றும் ‘இயல்வாகை நாற்றுப் பண்ணை’. மாற்றுக் கல்வி குறித்தும் இயற்கையின் முக்கியத்துவம் குறித்தும் குழந்தைகளுக்குத் தொடர்ந்து புரிதலை உண்டாக்கி வருகிறது இந்த அமைப்பு. சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் குழந்தைகள், விடுமுறை நாள்களில் இங்கு ஒன்று கூடுகிறார்கள். சிலம்பம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என நம் மண்ணின் கலைகளை கற்கிறார்கள். இயற்கை வாழ்வியல், இயற்கை உணவு முறையின் நன்மைகள், தவறான உணவு முறையின் தீமைகள் என இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பானவை.

கிணறு சுத்தம் செய்யப்படுவதற்கு முன்:

கிணறு

இங்குள்ள குன்றின்மீது அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்கு அருகே 'நாழி கிணறு' என்ற மிகப் பழமையான கிணறு உள்ளது. மீன், யானை, சூரியன், ஆமை என கிணறு முழுவதும் தொன்மையான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இந்தக் கிணற்றை சுற்றி நந்தவனம் இருந்தது. முருகன் கோயிலுக்குத் தேவையான பூக்கள் பூத்துக் குலுங்கிய இந்த இடம், நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துவிட்டது. ஊரில் உள்ள குப்பைகளை மக்கள் இந்தக் கிணற்றில் கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள். இந்தக் கிணற்றுக்கு எதிரிலேயே மயானமும் இருப்பதால், மாந்திரீகப் பொருள்களும் கொட்டப்படும். எங்கெங்கிருந்தோ வாகனங்களில் கொண்டுவந்து மருத்துவக் கழிவுகளையும் கொட்டுவார்கள். இப்படி பிரமாண்ட குப்பைத்தொட்டியாகவே மாறிவிட்டது இந்த நாழிக் கிணறு. இந்தக் கிணற்றை மீட்டெடுக்கச் சிறுவர்கள் முடிவெடுத்தார்கள்.

கிணற்றைச் சுத்தம் செய்யும் சிறுவர்கள்:

கிணறு

குக்கூ அமைப்பின் துணையுடன் களத்தில் இறங்கிய 25 சிறுவர்கள், இரண்டு நாட்களில் இங்குள்ள குப்பைகள் அனைத்தையும் அகற்றி, கிணற்றையும் தூர்வாரியிருக்கிறார்கள். சிறுவர்களின் இந்த அர்ப்பணிப்புக்கான பலனை இயற்கை உடனடியாக அளித்துள்ளது. சில நாள்களாக இந்தக் கிணற்றில் ஊற்று உருவாகி இருப்பதை அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். மக்கள் மீண்டும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க, கிணற்றுக்கு மேல் கம்பி வளையத்தைப் போட்டப் போகிறார்கள். இதையெல்லாம் செய்ததில் சிறுவர்களின் பங்களிப்பே அதிகம்.

சுத்தம் செய்யப்பட்ட பின் கிணறு:

கிணற்றை மீட்டெடுத்த சிறுவர்களை சந்தித்தோம். கூட்டாஞ்சோறுடம் நம்மை வரவேற்றவர்கள், ''கிணறு விஷயத்தை எப்பவோ முடிச்சுட்டோம். இன்னிக்கு துணிப்பையின் பயன்பாடு பற்றி மக்களுக்கு உணர்த்த சைக்கிள் பயணம் போகப்போறோம். நீங்களும் வாங்களேன்'' என்றார்கள்.

மகிழ்ச்சியுடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம். கிணறு தூர்வாரும்போது கிடைத்த களிமண்ணைக் கொண்டு அவர்கள் செய்திருந்த விதைப்பந்துகளை வழிநெடுக தூவிக்கொண்டே சென்றது, இயற்கையின் மீதான அவர்களின் அக்கறையை அழகாக எடுத்துக்காட்டியது. காங்கயம்பாளையத்தை நோக்கி சைக்கிள் பயணம் சென்றது. வழியில் மரத்தடி நிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த முதியவர்கள் சிலரைக் கண்டார்கள். அவர்களிடம் துணிப்பையின் பயன்பாடு குறித்து விளக்கிவிட்டு, தாங்கள் கொண்டுவந்திருந்த துணிப்பைகள் சிலவற்றையும் அளித்தார்கள்.

இப்படியே காங்கயம்பாளையம், கஸ்தூரிபாளையம், அய்யம்பாளையம் என அந்தந்த ஊர்களில் மக்களைச் சந்தித்தார்கள். பறை இசையுடன் வீதி நாடகத்தை நடத்தி, துணிப்பையின் பயன்பாடு குறித்தும் பாலிதீன் பைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சொன்னார்கள். எல்லாம் முடிந்து குக்கூ நூலகத்துக்குச் சிறுவர்கள் திரும்பியபோது இரவு 7 மணி.

kids

''இந்த லீவில் ஒருநாள்கூட சும்மா இல்லே. வீட்டுல டிபன் சாப்டுட்டு இங்கே வந்துருவோம். சாயங்காலம் வரைக்கும் கொண்டாட்டம்தான். நூலகத்துலருக்கிற புத்தகங்களை எடுத்துப் படிப்போம். வெளியே விளையாடுவோம். அப்படியே விதைகள் சேகரிப்போம். கழிவுப் பொருள்களில் பொம்மைத் தயாரிப்போம். ஊருக்குப் பொதுவா என்னவெல்லாம் செய்யலாம்னு பேசுவோம். அப்படித்தான் நாழிக் கிணறை தூர் வாரினோம். அடுத்ததா, ஜவ்வாதுமலையில் இருக்கும் நெல்லிவாசல் என்ற கிராமத்துக்குப் போறோம். அங்கே மலைவாழ் மக்களோடு ஐந்து நாள்கள் தங்கி, அவங்க வாழ்க்கை முறையைத் தெரிஞ்சுட்டு வரப்போறோம். இந்த அனுபவங்கள் எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு'' என்கிறார்கள் மகிழ்ச்சியாக.

விடுமுறையை இவ்வளவு பயனுள்ள கொண்டாட்டமாக கழித்திருக்கும் இந்தச் சிறுவர்களுக்கு நம் வாழ்த்தைச் சொல்வோம். சிறுவர்களுக்கான புதிய, ஆரோக்கியம் தருகிற இடங்களை அறிமுகப்படுத்துவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close