திருமுருகன் காந்திக்காகக் களம் இறங்கிய திரைப்பட பிரபலங்கள்!

கடந்த மே 21-ஆம் தேதி சென்னை காவல்துறை விதித்திருந்த தடையை மீறி 'மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நான்கு பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.  இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேப்பாக்கத்திலிருக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் இந்தப் பிரச்னையையொட்டி பல்வேறு தரப்பைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், கௌதமன், அமீர், ராம், பிரம்மா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார். 

திருமுருகன் காந்தி

அப்போது பேசிய பாலாஜி சக்திவேல், 'இந்தக் கைது நடவடிக்கை ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது' என்று அச்சம் தெரிவித்தார். 

'இது தமிழக அரசின் தன்னிச்சையான முடிவு அல்ல. மத்திய அரசு இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருக்கிறது' என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார். சுந்தர்ராஜன் பேசுகையில், 'குரல்வளையை நெறிப்பதுதான் ஜனநாயகமா' என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார். 

'திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் சிறையிலிருந்து உடனே விடுவிக்கப்பட வேண்டும்' என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!