வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (30/05/2017)

கடைசி தொடர்பு:18:17 (30/05/2017)

'ஒரு மணி நேரம் டூயூட்டி கட்' அரசு ஊழியர்களின் புதுப் போராட்டம் 

கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

வணிகவரித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 5ம் தேதி பணி நேரத்தில் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 
 தமிழக அரசின் அமுதசுரபி என்றழைக்கப்படும் வணிகவரித்துறையில் பல ஆண்டுகளாக சீனியாரிட்டி குளறுபடி மற்றும் 2013ம் ஆண்டிற்கான துணை கமிஷனர் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் இருந்துவருகின்றன. சீனியாரிட்டி குளறுபடி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வு கிடைக்காமல் தகுதியான அதிகாரிகள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தொடர்ந்து 2013ம் ஆண்டிற்கான துணை கமிஷனர் பதவி உயர்வுக்கான பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து பலமுறை வணிகவரித்துறை உயரதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகுதியான அதிகாரிகள் புலம்புகின்றனர். 
 இதுகுறித்து வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 7.4.2017ம் ஆண்டு வணிகவரித்துறையிலுள்ள கோரிக்கைளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அப்போது, 5.4.2017ல் இணை கமிஷனர் (நிர்வாகம்) முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, உதவி கமிஷனர், வணிகவரி அலுவலர் ஆகியோரின் பதவி உயர்வு, வணிகவரி அலுவலர் பட்டியல்களுக்கு விதித்திருத்தம் உள்ளிட்ட கோப்புகள் அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்துவருகிறது. உடனடியாக அமைச்சரும், உயரதிகாரிகளும் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி (இன்றும், நாளையும்)இரண்டு நாள்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவது, ஜூன் 5ம் தேதி அலுவலகங்களிலிருந்து மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு அனுப்பிய கடிதம்


 இதுதொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறுகையில்,"வணிகவரித்துறையிலுள்ள பிரச்னைகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதையும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சீனியாரிட்டி குளறுபடி, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகவரித்துறை சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் துணை கமிஷனர் பதவி உயர்வுக்கான உத்தரவை முதல்வராக ஜெயலலிதா பிறப்பித்து மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்தக் கோப்பு கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டம் நாளையும் தொடரும்" என்றனர். 
வணிகவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "வணிகவரித்துறையில் நிலவும் பிரச்னையால் ஒவ்வோர் ஆண்டும் அரசு நிர்ணயிக்கும் இலக்கை அடையமுடியவில்லை. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால், அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டாலும் மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்காக தமிழகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மத்திய அரசு அதிகாரிகளை அனுப்பத் தயாராக இருக்கிறது. ஆனால், மாநில அரசு, ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தும்போது மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அது ஈடுசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருவாய் இழப்பைக் கணக்கிட நடப்பு நிதியாண்டு வருவாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், நடப்பு நிதியாண்டில் வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் பணியிடங்கள் அதிகளவில் காலியாகவே உள்ளன. இதனால் மத்திய அரசு தெரிவித்துள்ளது போல தமிழகத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வதில் சிக்கல் நேரிடும். தமிழக அரசு, 2016-17ம் ஆண்டிற்கான வருவாய் இலக்காக 76 ஆயிரம் கோடி ரூபாயை நிர்ணயித்து இருந்தது. ஆனால், அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக 68 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டிற்கான இலக்கை அடைய முடியவில்லை. எனவே, வருவாய் இழப்பைத் தவிர்க்க அரசு உடனடியாகக் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.  


டிரெண்டிங் @ விகடன்