வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (30/05/2017)

கடைசி தொடர்பு:16:37 (30/05/2017)

மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்துக்கு அதிரடித் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

மதுரை உயர்நீதிமன்றம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மத்திய அரசு கடந்த வாரம் விதித்திருந்த தடைச் சட்டத்துக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடித் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு தடைச் சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து,  இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வந்தது. மேலும், விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்த தடை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் நேரடியாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் ஆங்காங்கே எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தத் தடையை எதிர்த்து செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாவா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 'அவரவர் சாப்பிடும் உணவைத் தெரிவு செய்துகொள்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசு தலையிட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், 'மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இது குறித்து வழக்கறிஞர் கூறுகையில், "மனிதர்களைக் காக்கவே இங்கிருக்கும் அரசுகளால் முடியவில்லை. பல நோய்களில் இருந்து, பல தீங்குகளில் இருந்து மனிதனைக் கூட முழுமையாகக் காக்க முடியவில்லை. எனவே, மாடுகளைக் காக்கிறேன், ஆடுகளைக் காக்கிறேன் என்பது ஏமாற்று வித்தையே தவிர, ஆயிரம் ஆண்டுகளாகச் சாப்பிட்டு வரும் உணவைத் தடுப்பது, தனி மனித உரிமைக்கு எதிரானது. ஒரு தனிமனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. எங்கள் தரப்பு வாதத்தை ஏற்று, மத்திய- மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையில், இந்தப் புதிய சட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.