வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (30/05/2017)

கடைசி தொடர்பு:17:40 (30/05/2017)

பெண் அதிகாரியைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

புதுடெல்லியில் நீச்சல் குளத்தில் மூழ்கிய சக பெண் அதிகாரியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசிஷ் தகியா என்பவர் உயிரிழந்தார். 

தெற்கு டெல்லியில், வசந்த் விகார் பகுதியிலுள்ள பெர் சராய், அயலகப் பணிப் பயிற்சிமையத்தில் இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது. உயிரிழந்த தகியாவின் சொந்த ஊர், ஹரியானா மாநிலம் சோனிப்பெட். பாரத் பெட்ரோலியம், இமாச்சலப்பிரதேச காவல்துறை, இந்திய வருவாய்த் துறை ஆகியவற்றில் பணியாற்றிய இவர், கடந்தாண்டு ஜம்மு காஷ்மீர் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வுபெற்றார்.

டெல்லி அயலகப் பணிப்பயிற்சி மையத்தில் தன் பயிற்சியை முடித்துவிட்டு, நாளை புதன்கிழமையன்று ஶ்ரீநகரிலுள்ள ஜம்மு காஷ்மீர் அரசின் பொது நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் நிலையப் பயிற்சியில் இணையவிருந்தநிலையில், இப்படியொரு துயரம் நிகழ்ந்துவிட்டது. முன்னதாக, டெல்லியில் பயிற்சி நிறைவடைவதை முன்னிட்டு, அயலகப் பணி, வருவாய்ப் பணியிலுள்ள நண்பர்களுடன் திங்கள் இரவு தகியா விருந்தில் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள நீச்சல்குளத்தில் திடீரென ஒரு பெண் அதிகாரி தவறி விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற சக அதிகாரிகள் பலரும் குளத்தில் குதித்தனர். ஒருவழியாக அந்த பெண் அதிகாரி காப்பாற்றப்பட்டார். பெண் அதிகாரியைக் காப்பாற்ற குளத்தில் குதித்த அதிகாரிகள் பலரும் வெளியே வந்துவிட்டபோதும், தகியாவை மட்டும் காணவில்லை. இதனால் சக அதிகாரிகள் அனைவரும் பதற்றமடைந்தனர். 

வசந்த் விகார் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர், தகியா மிதந்தநிலையில் காணப்பட்டார். ஃபோர்ட்டிஸ் மருத்துவமனைக்குத் தகியா கொண்டுசெல்லப்பட்டார். அவரது உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு 12.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். காவல்துறை விசாரணைக்குப் பிறகு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பயிற்சி முடிந்து அடுத்தநாள் பணியில் சேரவிருந்த நிலையில் இளம் அதிகாரி இறந்துபோனதால், சக அதிகாரிகளும் மேலதிகாரிகளும் துக்கத்தில் உறைந்துபோயினர். இறந்துபோன ஐ.ஏ.எஸ். அதிகாரி தகியாவின் மனைவி மருத்துவராவார்.