வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (30/05/2017)

கடைசி தொடர்பு:07:40 (31/05/2017)

தி.மு.க எம்.பி திருச்சி சிவா மகனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்புச் செயலாளரும், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுமானவர் சூர்யா. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, தி.மு.க புறநகர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளரான நஜீர்அஹமது என்பவர், சூர்யாவுக்குக் கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5 லட்ச ரூபாய் கடனாக வழங்கியுள்ளார்.

Tirchy

இதையடுத்து, மூன்று மாதத்துக்குள் கடனைத் திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வங்கி காசோலை ஒன்றை, சூர்யா வழங்கியுள்ளார். ஆனால் வங்கியில் போதிய பணமில்லை என காசோலை திரும்பப் பெறப்பட்டது. இதுகுறித்து திருச்சி சிவா மற்றும் அவரது மகன் சூர்யாவிடம் பணம் திரும்ப வழங்குமாறு பலமுறை கேட்டும், அலைக்கழிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின், கடந்த ஆண்டு நஜீர்அஹமது சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இவ்வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி, சூர்யாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சூர்யா ஆஜராகவில்லை. இதனால், சூர்யாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.