வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (31/05/2017)

கடைசி தொடர்பு:09:57 (31/05/2017)

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரன் வழக்கில் இன்று தீர்ப்பு!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி தினகரன் மீதான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன்


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரு அணிகளாக அ.தி.மு.க உடைந்ததால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, அப்போதைய அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் கைதுசெய்து, திகார் சிறையில் அடைத்தது.


இந்நிலையில், டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, டெல்லி ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டெல்லி போலீஸ், டி.டி.வி தினகரனுக்கு ஜாமீன் அளிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூனம் சௌத்ரியின் தலைமையிலான அமர்வு, லஞ்சம் கொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.