வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (31/05/2017)

கடைசி தொடர்பு:10:52 (31/05/2017)

மேலும் ஒரு வழக்கில் கைது! திருமுருகன் காந்தியைக் குறிவைக்கும் தமிழக அரசு!

குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மேலும் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரினாவில் மே 21ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 29ஆம் தேதி திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நான்குபேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. இந்தநிலையில், திருமுருகன் காந்திக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், கௌதமன், அமீர், ராம், பிரம்மா, பாலாஜி சக்திவேல், பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று களத்தில் இறங்கினர்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள ஐஓசி அலுவலகம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன் ஆகியோர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமுருகன் காந்திமீது 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.