Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''இது எனக்கு மட்டுமில்ல... இந்தியாவுக்கே முதல் தங்கம்!" - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி #VikatanExclusive

பவானி தேவி

"ஆறாவது படிச்சுட்டு இருந்தப்போ கிளாஸை கட் அடிக்கிறதுக்காக விளையாட்டுப் போட்டிக்கு பெயர்கொடுக்க நினைச்சேன். 'மற்ற விளையாட்டுகளுக்கு ஆட்களை சேர்த்தாச்சு. வாள்சண்டை போட்டியில் கலந்துக்கறியா?'னு கேட்டாங்க. வேற வழியில்லாமல் பெயர் கொடுத்தேன். இப்போ, அதுவே எனக்கான அடையாளமா மாறியிருக்குது. பதினாலு வயசுல சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சுட்டேன். தங்கப்பதக்கம் ஆசை நிறைவேற ஒன்பது வருஷங்கள் ஆகியிருக்கு. இந்தியாவில் அதிகம் ஃபேமஸாகாத இந்தப் போட்டி, இப்போ என் மூலம் ஓரளவுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு'' என்கிறார்  வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பவானி தேவி. சமீபத்தில், ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

"இனி வாள்வீச்சுதான் எனக்கான உலகம்னு முடிவெடுத்ததும் ஒவ்வொரு போட்டியிலும் முழுத் திறமையை வெளிப்படுத்தினேன். இதுவரை பல சர்வதேசப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வாங்கியிருக்கேன். தங்கப்பதக்கம் மட்டும் மிஸ்ஸாகிட்டே இருந்துச்சு. ஐஸ்லாந்தில் நடந்த போட்டிக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் எதுவும் எடுக்கலை. அடுத்தடுத்து கலந்துக்கும் போட்டிகளுக்கும் சேர்த்து பொதுவாகத்தான் ட்ரெய்னிங் எடுத்திருந்தேன். நம்பிக்கையோடு போட்டியில் கலந்துக்கிட்டு, சேபர் பிரிவு வாள்வீச்சில் தங்கம் ஜெயிச்சிருக்கேன். இந்த சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் கடந்த ரெண்டு வருடங்களும்  விளையாடி, ஐந்து மற்றும் ஆறாவது இடம் பிடிச்சிருந்தேன் முந்தைய அனுபவங்களிலிருந்து தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிச்சு விளையாடினேன். கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்று மூன்றிலும் முதல் பாதியில் பின்தங்கியே இருந்தேன். ஆனால், இரண்டாம் பாதியில் சுதாரிச்சு விளையாடினேன். ஃபைனலில் கிரேக் பிரிட்டனின் சராக் ஜானி ஹம்ப்சன் என்ற வீராங்கனையைத் தோற்கடிச்சு என் தங்கக் கனவை நிஜமாக்கினேன்" என்கிறார் பவானி தேவி உற்சாகமாக.

பவானி தேவி

"சர்வதேசப் போட்டியில் எனக்கு கிடைச்ச முதல் தங்கப்பதக்கம் இதுதான். இந்தியாவுக்கு வாள்சண்டைப் போட்டியில் கிடைக்கும் முதல் சர்வதேச தங்கம் இது என்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தியா மற்றும் உலகம் முழுக்க பலரிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்துச்சு. என் ரோல்மாடலான மரியேல் ஜாகுனிஸின் அம்மா எனக்கு போன் பண்ணி பாராட்டினதோடு, பெர்ஷனலாவும் பல விஷயங்களைப் பேசினாங்க. நம்ம மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், கிரிக்கெட் வீரர் சேவாக் ஆகியோர் வாழ்த்தியது மறக்க முடியாது. இனி வாள்வீச்சுப் போட்டியும் இந்தியாவில் கவனம்பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கு" என்கிற பவானி, தன் வெற்றியின் காரணங்களில் அம்மாவின் ஊக்கம் பற்றி கூறுகிறார்.

"மனதளவிலும் உடலளவிலும் ரொம்பவே தைரியமா இருந்தால்தான் வாள்சண்டை மாதிரியான போட்டிகளில் நமக்கான அடையாளத்தை ஏற்படுத்த முடியும். இந்த எல்லா வெற்றிகளிலும் என் பெற்றோர் ரொம்பவே உறுதுணையா இருந்தாங்க. ஆரம்பத்தில், 'யாருக்குமே தெரியாத இந்த விளையாட்டில் இவ்வளவு மெனக்கெடணுமா?'னு பலரும் சொல்லுவாங்க. அப்போவெல்லாம் 'உன் ஆசைப்படி வாள்வீச்சுப் போட்டியிலேயே விளையாடு. நிச்சயம் உன்னால் இந்தியாவுக்குப் பெருமை கிடைக்கும்'னு ஊக்கப்படுத்தினது என் பெற்றோர்தான். பயிற்சிக்கான செலவுகளுக்கு அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. ஒவ்வொரு போட்டியிலும் கலந்துக்க, வெவ்வேறு நாடுகளுக்கு தனியா அனுப்பிவைப்பாங்க. என் ஒவ்வொரு முயற்சியிலும் என் அம்மா முக்கிய ரோல் வகிச்சிருக்காங்க" என்கிற பவானி தேவி அடுத்தப் போட்டிக்குத் தயாராகிவருகிறார்.

பவானி தேவி

''இப்போ இத்தாலியில் இருக்கேன். ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதி மாஸ்கோவில் கிராண்ட் ஃபிக்ஸ் போட்டிகள் நடக்கப்போகுது. அதுக்காக தீவிர பயிற்சி எடுத்துகிட்டிருக்கேன். போன வருஷம் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க முடியாம போச்சு. இப்போ கிடைச்சிருக்கும் தங்கப்பதக்கம், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வாங்க உத்வேகப்படுத்தும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

இவரைப் போன்ற இளைஞர்கள் இந்தியாவுக்கு பதக்க மாலைகளைச் சூட்டுகிறார்கள். அவர்களின் வெற்றிப் பயணம் மகிழ்ச்சியோடு தொடரட்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement